அமெரிக்க அரசின் பயணத் தடை காரணமாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாக சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக ஒரு தசாப்தத்திற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாத சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாரின் மனித உரிமைகளை அமெரிக்கா மீறியிருப்பதாகவும் அமைச்சர் ஜயசேகர சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
புலம்பெயர்வாழ் தமிழர்களின் உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுக்கள் மற்றும் யாஸ்மின் சூக்காவின் ஒருதலைபட்சமான அறிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்கா இராணுவத்தின் முக்கியப் புள்ளிகளுக்கெதிராக மனித உரிமை குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு பயணத் தடை அமுல்படுத்தப்படுவதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த அதிகாரியொருவரின் குடும்பத்தவர்கள் மீது தீர்மானம் எடுப்பதற்கு அமெரிக்காவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது சில்வாவின் குடும்பத்தவர்கள் மீதான அடிப்படை உரிமை மீறல் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளதென்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment