தீர்க்கதரிசனமோ அல்லது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையோ கொண்டிராத தமிழ் தலைமைகளை தெரிவு செய்தமையின் காரணமாக தமிழ் மக்கள் பல்வேறு அசௌகரிங்களை எதிர்கொள்வதோடு நிர்வாக சிக்கல்களுக்கும் முகங்கொடுக்கும் துர்ப்பாக்கியம் எற்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் மற்றும் நீர் வள மூலங்கள் அமைச்சிற்கு இன்று (24.02.2020) சென்ற முல்லைத்தீவு மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரின் அவதானத்திற்கு கொண்டு வந்தனர். குறிப்பாக அரச நிறுவனங்களின் வினைத்திறன் அற்ற செயற்பாடு காரணமாக தமது மாவட்டத்திற்கு ஒதுக்கப்படுகின்ற பெருந்தொகை நிதி மீண்டும் திறைசேரிக்கு திரும்புவதாகவும் முல்லைத்தீவு பிரதேச மக்கள் பிரதிநிதிகளினால் அமைச்சரிடம் எடுத்துக் கூறப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், அரச திணைக்களங்கள் மீதோ அரசாங்க அதிகாரிகளின் மீதோ குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசியல் தலைமைத்துவங்களினால் சரியான வழிகாட்டல் வழங்கப்படுமாயின் அரச திணைக்களங்களை வினைத்திறனுடன் செயற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
எனவே, தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அரசியல் அசௌகரியங்கள் அனைத்திற்கும் தவறான தெரிவுகளே காரணம் என்று தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்திலேனும் தமிழ் மக்கள் சிந்தித்து சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
முல்லைத்தீவு பிரதேச சமூக அமைப்புக்களுடனான சந்திப்பினை தொடர்ந்து இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் உட்பட்ட அதிகாரிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்தார்.
கொக்குளாய், மின்னேரியா, திருகோணமலை, கொட்பே ஆகிய பிரதேங்களுக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்த இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
அவற்றை செவிமடுத்த அமைச்சர், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் நன்மையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் தன்னுடைய பூரண ஒத்துழைப்பு இருக்கும் எனத் தெரிவித்து உற்சாகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment