(ஆர்.விதுஷா)
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அதன் ஊடாக எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்விடயத்தை காரணம் காட்டியே ஜெனிவா மனித உரிமை பேரவை உட்பட, ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினர்கள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கின்றார்கள். என முன்னிலை சோசலிச கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களுக்களித்த வாக்குறுதிகளிலிருந்து விலகி செயற்படுகின்றது. ஆகவே பொதுத் தேர்தலின் போது நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின் கல்வி விவகார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னிலை சோசலிச கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களின் எதிர்பார்ப்புக்கள் இன்று நிறைவேற்றப்படவில்லை. மாறாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் 11 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
அதேவேளை நாட்டில் உரத்தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அரச பணிகளிலிருந்து நீக்கப்பட்டனர். ஏகாதிபதிய ஆட்சியை இல்லாதொழிப்பதாக இந்த அரசாங்கம் கூறிக்கொண்டது. ஆயினும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மாறுபட்ட விதத்தில் அமைந்துள்ளன.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலிருந்தும் விலகுவதற்கு இந்த அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
அந்த 30/1 என்ற தீர்மானத்தில் மிக முக்கியமாக யுத்தத்தின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக விரிவான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த விசாரணைப் பொறிமுறையில் பொதுநலவாய நாடு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். என்ற பரிந்துரைகளும் இடம் பெற்றிருந்தன.
சர்வதேச நாடுகள் யுத்த அனுகுமுறைகள் தொடர்பில் விதிமுறையுண்டு. அதனை மீறி இலங்கை செயற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. ஆகவே, இதன் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் அனைத்து உலக நாடுகளுமே பொறுப்புக்கூற வேண்டும் அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment