உயிராபத்தை பொருட்படுத்தாது அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சார்பில் இராணுவத் தளபதி பாராட்டினை தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவிய சீனாவின் வூஹான் நகரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 33 பேரை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதை முன்னிட்டு சந்திப்பொன்று நேற்று (14) பிற்பகல் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் அக்குரேகொட இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் வூஹானிலிருந்து விசேட விமானம் ஒன்றில் மத்தளை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் விசேட பஸ் வண்டி ஒன்றின் மூலம் தியத்தலாவையில் உள்ள இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள நோய்த் தொற்று தடுப்பு மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
14 நாட்கள் நோய்த் தொற்று தடுப்புக் காலம் நிறைவடைந்து நோய்த் தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்கள் தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து வெளியேறியுள்ளனர்.
மாணவர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு பங்களிப்பு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றபோது இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவத் தளபதி பாராட்டினார்.
உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு முன்மாதிரியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை இலங்கை இராஜதந்திர ரீதியாக அடைந்து கொண்ட முக்கிய வெற்றியாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சரியான தலைமைத்துவம் இதற்கு உதவியாக இருந்தது என்றும், இதற்காக பங்களித்த அனைத்து நிறுவனங்களுக்கும் இராணுவத் தளபதி நன்றி தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த மாணவர்கள் இவ்வாறானதொரு இடர் சந்தர்ப்பத்தில் தங்களை தனிமைப்படுத்தி விடாது, நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் தமக்கான பொறுப்பினை நிறைவேற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்தனர்.
நாட்டு மக்களுக்காக தைரியத்துடன் செயற்பட்டு வரும் ஜனாதிபதியின் நிகழ்ச்சித் திட்டங்கள் முழு உலகிற்கும் முன்மாதிரியானதாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, ஜனாதிபதியின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சு, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரிகளும் பணிக்குழாமினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment