கோப் குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பத்து முக்கிய நிறுவனங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆவண செய்ய வேண்டுமென கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று கோப் குழுவின் முதலாவது அறிக்கையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் சபாநாயகரிடம் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
கோப் குழுவின் அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்களை பங்கேற்கச் செய்வது தொடர்பில் மக்களின் வரவேற்புக் கிடைத்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சபாநாயகரைக் கேட்டுக் கொண்டார்.
கோப் குழுவில் பத்து முக்கிய நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகளில் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பாராளுமன்றத்தின் காலத்திலேயே தற்போது சபாநாயகராகவுள்ள உங்கள் பதவிக் காலத்திலேயே சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கோப் குழுவானது கணக்காளர் நாயகத்தின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளாத நிலையில் கோப் குழுவின் அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் குறிப்பிட்டார். கோப் குழு இன்று கூடவுள்ள நிலையில் அதன் தலைவர் என்ற வகையில் அவர் இதனை சமர்ப்பிப்பது முறையா என்றும் சபையில் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் தெரிவித்த சபாநாயகர் கருஜயசூரிய, அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டதாலும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment