சமத்துவ மக்கள் சக்தி அன்னம் சின்னத்தில் போட்டியிடும், நாம் பிரிந்தால் மக்கள் புறக்கணித்து விடுவார்கள் - ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

சமத்துவ மக்கள் சக்தி அன்னம் சின்னத்தில் போட்டியிடும், நாம் பிரிந்தால் மக்கள் புறக்கணித்து விடுவார்கள் - ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி.

ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியான சமத்துவ மக்கள் சக்தி, அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதென கூட்டணிக் கட்சிகளிடையே இணக்கம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று புதன்கிழமை இறுதி முடிவு எட்டப்படுமென அதன் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பெரும்பாலும் எமது கூட்டணியின் சின்னம் அன்னமாகவே இருக்கலாமென அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானைச் சின்னத்தைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சட்டச் சிக்கல்கள் காணப்படுவதால் அந்த நல்லெண்ணத்தை கைவிட்டு புதிய சின்னத்தில் களமிறங்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உருவான முரண்பாடுகள் முழுமையாக நிவர்த்திக்கப்பட்டிருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்தே தேர்தலில் களமிறங்க இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

நாம் பிரிந்து நின்று செயற்பட முனைந்தால் மக்கள் எம்மை புறக்கணித்து விடுவார்கள். அது எமது பிரதான எதிரிக்கு சாதகமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடும். அத்துடன் மக்கள் மத்தியில் தாம் நம்பிக்கை இழந்து விடுவோம். அதற்கு இடமளிக்காமல் நாம் ஒன்றுபட்டு ஒரே அணியாக நின்று செயற்படவே முடிவு செய்துள்ளோம்.

தேர்தலில் எந்த அணியில் நின்று செயற்பட்டபோதும் நாம் எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களே. எமது தாய்க் கட்சிக்கு அபகீர்த்தி ஏற்பட நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். 

பொதுத் தேர்தலின்போது நிச்சயமாக எமது கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் எதிர்த்தரப்பிலிருந்து பலர் எம்முடன் இணையவிருக்கின்றனர் என்றார்.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment