படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பை அரசாங்கம் அலட்சியப்படுத்தியதாலேயே தற்போது சவேந்திர சில்வாவுக்கு பயணத் தடையை அமெரிக்கா விதிக்கும் நிலை உருவாகியுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார்.
அரசாங்கம் சர்வதேச நியமங்களை அலட்சியப்படுத்துமானால் எதிர்காலத்தில் இலங்கை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிணை முறி மோசடி தடயவியல் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே சரவணபவன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்துள்ள தடையானது எமது நாட்டின் அபகீர்த்திக்கும் அவர் மீது நம்பிக்கை வைத்த இரண்டு ஜனாதிபதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட அவமானமாகவே கருத முடிகிறது.
ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புகள் ஆவணப்படுத்தப்பட்ட சவேந்திர சில்வாவின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது என கூறலாம்.
இலங்கை அரசாங்கமும் அவர் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்றும் அமெரிக்கா விதித்துள்ள அவருக்கான பயணத் தடையை நீக்குமாறும் கோரிக்கை விடுத்து வருகிறது.
இறுதிப் போரின் போது பல்வேறு தரப்பினராலும் யுத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும் அரசாங்கம் அதற்கான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
அந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட குற்றச்சாட்டையும் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் அரசாங்கம் தற்போது நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறு சர்வதேச நியமங்களை அரசாங்கம் அலட்சியம் செய்யுமானால் எதிர்காலத்தில் இலங்கை சர்வதேச அரங்கிலிருந்து தனிமைப்படுத்தப்படும் நிலையே உருவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment