48 நாடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீசா வழங்கும் நடைமுறையை இன்னும் 03 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதற்கமைய 48 நாடுகளுக்கான இலவச வீசா வழங்கும் நடைமுறை பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முன்மொழிவை சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
48 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வீசா விநியோகிக்கும் வேலைத்திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 06 மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு இலவச வீசா வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் இந்த நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமையை கவனத்தில் கொண்டு கட்டணம் அறவிடப்படாமல் வீசா வழங்கும் முறைக்கான வேலைத்திட்டம் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment