இரு தடவைகள் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டும் நியமனம் இன்னுமில்லை - வட மாகாண சுகாதார தொண்டர்கள் ஏமாற்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

இரு தடவைகள் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டும் நியமனம் இன்னுமில்லை - வட மாகாண சுகாதார தொண்டர்கள் ஏமாற்றம்

வட மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக கடந்த ஆண்டு இரண்டு தடவைகள் நேர்முகத் தேர்வு இடம்பெற்றும் கூட நியமனம் இன்னுமே வழங்கப்படவில்லை எனவும், இரண்டு தடவைகள் இடம்பெற்ற நேர்முகத் தேர்விலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது எனவும் சுகாதாரத தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் நீண்ட காலமாக தொண்டர்களாக பணியாற்றிய 909 பேருக்கும் கடந்த வருடம் மே மாதம் 27, 28 ஆம் திகதிகளில் நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. 

இதன் போது 452 சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நியமனத்தை சாவகச்சேரியில் வைத்து வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததோடு, ஒருவர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். 

இதனையடுத்து குறித்த நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நியமனங்களை ரத்துச் செய்து புதிதாக நேர்முகத் தேர்வினை நடத்தி சரியானவர்களைத் தெரிவு செய்யுமாறு அப்போதைய ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் சுகாதாரத் தொண்டர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த வருடம் செம்டம்பர் 27,28.29 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இதன் போது 386 பேர் நிரந்தர நியமனத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். புள்ளி அடிப்படையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

இவர்களுக்கான நியமனக் கடிதங்களும் வடக்கு சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அப்போது ஜனாதிபதித் தேர்தல் காலம் என்பதனால் தேர்தல் முடிய கடமைகளை பொறுப்பேற்குமாறு நியமனக் கடிதம் பெற்றவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இதன் பின்னரும் நியமனம் கிடைக்காததால் சுகாதாரத் தொண்டர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் இரண்டாவது நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டு நியமனம் கடிதம் வழங்கப்பட்டவர்களின் நியமனமும் ரத்துச் செய்யப்பட்டது. காரணம் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றதாக சொல்லப்பட்டது.

ஆனால் இரண்டு நேர்முகத் தேர்வுகளையும் ஆளுநரின் பணிப்புக்கமைய வடமாகாணத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த நிர்வாகத் தர உயரதிகாரிகளும், மருத்துவத் துறையில் அனுபவம் பெற்றவர்களும் நடத்தியிருந்தனர். 

இந்த இரண்டு தடவையும் இவர்களால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் ஏதேனும் தவறுகள் உள்ளனவா என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தங்களின் நியமனத்தை இழுத்தடிக்க வேண்டாம் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment