நிர்பயா பலாத்கார கொலை குற்றவாளிகள் நால்வருக்கும் மார்ச் 3 ஆம் திகதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று டில்லி நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
23 வயது மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டில்லியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அக்ஷய் சிங் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கீழ் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை இவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது. குடியரசுத் தலைவருக்கு இவர்கள் தனித்தனியாக அனுப்பிய கருணை மனுக்களும் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே கருணை மனுக்களையும், சீராய்வு மனுக்களையும் மீண்டும் மீண்டும் தாக்கல் செய்து, அதுவும் தனித்தனியாக தாக்கல் செய்து நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதை ஒட்டித்தான் நிர்பயாவின் பெற்றோர் கூட சென்ற வாரம் நீதிமன்ற நுழைவாயிலிலேயே போராட்டம் நடத்தினார்கள். ஏன் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் இவ்வளவு தாமதம் ஏற்படுகிறது? நீதிமன்றத்தை இவர்கள் கேலிக்கூத்தாக்குகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினர்.
ஒருவர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து தள்ளுபடியானதும் இன்னொருவர் தாக்கல் செய்வது என குற்றவாளிகள் தொடர்ந்து இழுத்தடித்து வந்தனர்.
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு, பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு, கருணை மனுக்கள் என்று தண்டனையை எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் தாமதப்படுத்தினர்.
நீதிமன்றங்கள் இதுவரை அவர்களுக்கான வாய்ப்புகள் அனைத்தையும் அனுமதித்தது. தற்போது அந்த வாய்ப்புகள் அனைத்துமே முடிந்து போயுள்ளன.
No comments:
Post a Comment