இனவாத பிடியில் இருந்து இந்த அரசால் மீள முடியாது என்பது சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் உறுதியாகியுள்ளது - இம்ரான் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Sunday, February 23, 2020

இனவாத பிடியில் இருந்து இந்த அரசால் மீள முடியாது என்பது சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் உறுதியாகியுள்ளது - இம்ரான் எம்.பி

இனவாத பிடியில் இருந்து இந்த அரசால் மீள முடியாது என்பது சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் உறுதியாகியுள்ளது என பாராளுமன்றஉறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். 

வியாழக்கிழமை மாலை பாராளுமன்ற கட்டிட தொகுதியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் இந்த அரசால் அப்பிரதேச மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவர்களின் நீண்ட கால கோரிக்கையான தனியான நகர சபையை வழங்குவதாக வர்த்தமானி வெளியிட்டபின் அந்த வர்த்தமானியை ரத்து செய்வதாக கூறுவது இந்த அரசு இனவாத நிகழ்ச்சி நிரலை தாண்டி செயற்பட முடியாது என்பதுக்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

இவ்வாறாக இனவாதிகளின் பிடியில் உள்ள இந்த அரசு கேட்பதை போல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோ ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையோ கிடைத்தால் சிறுபான்மையிருக்கு அந்த அரசில் என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

எமது அரசின் காலத்திலும் நுவரேலியாவில் புதிதாக ஆறு சபைகளை உருவாக்கினோம். அப்பொழுதும் எமக்கு இனவாதிகளிடம் இருந்து அழுத்தங்கள் வந்தன. அதற்காக நாங்கள் அதை ரத்து செய்யவில்லை.

அதேபோன்று எமது அரசும் சாய்ந்தமருது விடயத்தில் நூறுவீதம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்பதே எனது நிலைப்பாடு. சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வழங்கும்போது கல்முனை நகருக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் சிறந்த தீர்வொன்றை பெறவே அன்றைய எமது அரசு முயற்சி செய்து அதற்கான எல்லை பிரிப்பையும் செய்தது. அதை வர்த்தமானியில் அறிவிக்க காலம் தாழ்த்தியமையே எமது அரசு விட்ட தவறு.

இந்த நகர சபை விடயத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் கண்டிக்கத்தக்கன. இது தொடர்பான உண்மைத் தன்மையை அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். எதிர்காலங்களில் இவ்வாறான கருத்துக்களை அவர்கள் வெளியிடமாட்டார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment