அன்று இந்த மண்ணில் வாழ்ந்த எமது முன்னோர்கள் இந்த நாட்டுக்குச் செய்த சேவைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அவர்கள் இல்லை என்றால் நாம் இந்த மண்ணில் இன்று இல்லை. ஏன் இந்த நமது நாடும் சுதந்திரம் பெற்றிருக்க முடியாது. இதனைக் கருத்தில் கொண்டு, "இலங்கையர்கள்" என்ற உணர்வோடு எமது ஐக்கியத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்வோம் என்று, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் தொடர்பில் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்தச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அன்று எமது முன்னோர்கள் இந்த நாட்டுக்குச் செய்த புனித சேவைகள் அனைத்தும், இன்று மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருவதை, மிகவும் கவலையோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நாம் எமது முன்னோர்களின் வரலாற்றைத் தேடிப் படித்து, அதனை எமது எதிர்காலச் சந்ததிகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது ஒரு அவசரத் தேவை மட்டுமல்ல, நம் அனைவர் மீதும் ஒரு கட்டாயக் கடமையாகும் என்பதையும் மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் எமது தேசப் பற்றை தேசியக் கொடி மற்றும், தேசியக் கீதத்தோடு மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல், எல்லா இன மக்களுடனும் மனித நேயத்துடன் நடந்துகொள்ள முன்வர வேண்டும். சுயநலம் இன்றி சமூக அக்கறை கொண்டவர்களாக நாம் மாற வேண்டும்.
அன்று வாழ்ந்த நமது முன்னோர்கள், சுயநலம் உள்ளவர்களாகச் செயற்பட்டு இருந்தால், இன்று இந்த மண்ணில் நாம் நிம்மதியாக வாழ்ந்திருக்க மாட்டோம். இன்று நாம் எமது மார்க்கக் கடமைகளையும், வணக்கங்களையும் நிறைவேற்றுகின்றோம் என்றால், அதற்கும் காரணம் அந்த முன்னோர்கள்தான் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
நாம் இந்த உலகில் வாழ்கின்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். பிறந்தோம், வாழ்ந்தோம், மரணித்தோம் என்று இல்லாமல், எமது பிறப்பு, இறைவனுக்கும் நாட்டுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும்.
நாம் இந்த உலகில் வாழ வந்தவர்கள் அல்ல. பிறரையும் வாழ வைக்க வந்தவர்கள். இந்தப் பழக்க வழக்கங்கள் நம்மிடையே எப்பொழுதும் எங்கேயும் வேரூன்றி இருக்க வேண்டும். நாம் மரணித்தாலும் யாரும் எம்மை மறக்கக் கூடாது. யாரும் எம்மை வெறுக்காத அளவுக்கு எமது வாழ்கை மற்றும் செயல்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், யாரும் மறக்காத அளவுக்கு எமது மரணம் நிச்சயம் இருக்கும்.
எனவே, பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி உதயமாகும் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை வரவேற்குமுகமாக எமது இல்லங்கள், வியாபாரஸ்தலங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் இலங்கையின் தேசியக் கொடியை உயர்த்தி, "நாமும் இந்த மண்ணில் பிறந்தவர்களே" என்று எமது நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவோம்.
இலங்கை வாழ் அனைத்து இன மக்களுடனும் ஒற்றுமையாய்க் கை கோர்த்து செயற்படுவோம். இது எமது தாய் நாடு. எமது "தாய்" க்கு நாம் என்ன கடமைகளைச் செய்கின்றோமோ, அதைப் போல் எமது தாய் நாட்டுக்கும் எமது கடமைகளைச் செய்ய முன்வர வேண்டும்.
ஐ.ஏ.காதிர் கான்
No comments:
Post a Comment