குரல் பதிவுகளை சபையில் சமர்ப்பிப்பது தவறான முன்னுதாரணம் - பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாப்பது சபாநாயகரின் பொறுப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

குரல் பதிவுகளை சபையில் சமர்ப்பிப்பது தவறான முன்னுதாரணம் - பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாப்பது சபாநாயகரின் பொறுப்பு

ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள 19 குரல் பதிவுகளையும் சபையில் சமர்ப்பிப்பது தவறான முன்னுதாரணமாகும். இதனை சபையில் சமர்ப்பிப்பதால் சமூகத்திற்கு எந்த நன்மையும் ஏற்படாது. நிலையியற் கட்டளையில் இதற்கு அனுமதியில்லையென முன்னாள் நீதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குரல் பதிவு தொடர்பான சர்ச்சையில் உரையாற்றிய அவர், பாராளுமன்ற அதிகாரங்கள், சிறப்புரிமைகள் பிரகாரம் சபாநாயகர் செயற்பட வேண்டும். 

எம்.பிக்களுக்கு சில சிறப்புரிமைகள் உள்ளன. ரஞ்சன் எம்.பி குரல் பதிவுகளை சமர்ப்பித்துள்ளார். அதில் ஊர்வம்புகளும் கெட்ட வார்த்தைகளும் தான் உள்ளன. 

எம்.பி ஒருவர் பல்வேறு நபர்களுடன் பேசிய கெட்ட வார்த்தைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எந்த சட்ட அனுமதியும் கிடையாது. இதனை சபையில் ஆற்றுப்படுத்துவதால் சமூகத்திற்கு எந்த பயனும் கிடைக்காது. எந்த சட்ட ஒழுங்கின் கீழ் இந்த குரல் பதிவுகளை சமர்ப்பிக்கிறீர்கள் என தெளிவுபடுத்த வேண்டும்.

கட்சித் தலைவர்கள் உடன்பட்ட காரணத்திற்காக அவற்றை சமர்ப்பிக்க முடியுமா? பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாப்பது சபாநாயகரின் பொறுப்பாகும். உங்கள் முடிவு எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாக அமையும். 

கேவலமான எம்.பிக்கள் எதிர்காலத்தில் தெரிவானால் அவர்களும் பொய்களை கூறி சபையில் சமர்ப்பிப்பார்கள் உங்கள் முடிவு எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாக பயன்படுத்தப்படலாம். அது உங்களுக்கு கரும்புள்ளியாக அமையும். நிலையியற் கட்டளைக்கமையவே செயற்பட வேண்டும். குரல் பதிவுகளை சமர்ப்பிக்கும் முடிவை மாற்ற வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment