சீனாவின் ஹுபேய் மாகாணத்தின் தலைநகர் வூஹான் நகரில் சிக்குண்டிருந்த இலங்கை மாணவர்கள் 33 பேரும் நேற்று (01) பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இலங்கையிலிருந்து சென்ற 16 பேர் கொண்ட விசேட குழுவொன்று வூஹான் நகருக்குச் சென்று இந்த மாணவர்களை அழைத்து வந்தது.
இந்த மாணவர்கள் தற்போது பாதுகாப்பாக தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள விசேட இராணுவ வைத்திய முகாக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இம் மாணவர்களின் உடை, பொருட்கள் என அனைத்திலிருந்தும் ஒருதுளி விசம்கூட இலங்கைக்குள் பரவாத வகையில் இந்நடவடிக்கையை இராணுவத்தினரும், விமானப்படையினரும் இணைந்து செய்துள்ளனர்.
வைத்தியர் பிரிகேடியர் சவீன் சேமசிங்க தலைமையில் விசேட வைத்திய நிபுணர் குழு இந்த மாணவர்களுக்கான சுகாதார வசதிகளை மேற்கொள்ளவுள்ளது.
மாணவர்களின் உடைமைகள் அனைத்தும் தீவிர இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே முகாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு உயரிய தொழில் நுட்பத்துடன், கூடிய பாதுகாப்பு பொறிமுறையொன்று வகுக்கப்பட்டு செயற்படுத்தப்படுவதுடன், எவரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
உலகில் மிகக் கொடூரமான யுத்தத்தை எதிர்கொண்ட எம்மால் சவாலையும் வெற்றி கொள்ள முடிந்துள்ளதென சுகாதார அமைச்சர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அங்கொட தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் அனுமதியாகிய சீன நாட்டுப் பெண் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.
அந்த பெண்ணின் உடலிலிருந்து விசக் கிருமிகள் தற்போது அகன்றுள்ளது. நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கமைய இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே, இன்று ஞாயிற்றுக்கிழமை அல்லது நாளை சீனப் பெண் வைத்தியசாலையிலிருந்து வெளியேறக்கூடியதாகவிருக்கும்.
அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 16 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 20 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒருவருக்கு மாத்திரமே நோய் தொற்று இருந்தது. அவரும் தற்போது குணமடைந்துவிட்டார் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment