(எச்.எம்.எம்.பர்ஸான்)
மாற்றுத்திறனாளிகள் மற்றும் விஷேட தேவையுடையவர்கள் மத்தியில் நாங்கள் வெளிப்படையாக அனுதாபம் கொள்ளாமல் அதை நம் மனதளவில் வைத்துக் கொண்டு அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ. அகமட் அப்ஹர் தெரிவித்தார்.
அண்மையில் ஓட்டமாவடி சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளிடம் நாங்கள் வெளிப்படையாக அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தால் நாங்கள் ஒரு பாவப்பட்ட சமூகம் என்கின்ற ஒரு தோற்றப்பாட்டை அவர்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும்.
ஆகவே அவர்களிடத்தில் அனுதாபங்களை வெளிப்படையாக காட்டாமல் அவர்களை ஊக்கப்படுத்துகின்ற, தட்டிக் கொடுக்கின்ற செயற்பாடுகளைத்தான் நாம் செய்ய வேண்டும்.
அதற்காகத்தான் அரசாங்கமும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சகல பாடசாலைகளிலும் விஷேட தேவையுடையோர், மாற்றுத்திறனாளிகளை ஏனைய மாணவர்களைப் போல் சமமாக மதித்து அவர்களுக்கான வசதி வாய்ப்புகளை செய்து வருகிறது.
அதே போன்றுதான் சகல அரச நிறுவனங்களில் அவர்களுக்கான ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள், விஷேட தேவையுடையோர்கள் அனைவரும் ஏனையவர்கள் போன்று சமமானவர்கள் எனும் அந்தஸ்தை அரசு வழங்கி வருகின்றது.
பெற்றோர்கள்தான் மாற்றுத்திறனாளிகளை வெளி சமூகத்திற்கு கொண்டு வராமல் வீட்டிலே பூட்டி வைக்கின்ற ஒரு துரதிர்ஷ்ட வசமான நிலைமை எமது சமூகத்தில் மிகக் கூடுதலாக காணப்படுகின்றது.
எனவே விஷேட தேவையுடையவர்களை பெற்றோர்கள் சமூகத்திற்கு மத்தியில் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை நிறுவனங்கள், திணைக்களங்களின் ஒத்துழைப்புகளுடன் இணைந்து செயற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
உண்மையில் மாற்றுத்திறனாளிகள் என்று நாங்கள் ஒதுங்கி இருக்கக் கூடாது உடலால் நாங்கள் மாற்றுத்திறனாளிகளாக இருந்தாலும் உள்ளத்தால் பலம் கொண்டவர்களாக இருக்கின்றோம் எனும் நம்பிக்கை வரவேண்டும். இந்த சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளும் ஏனையவர்கள் போன்று சமமாக வாழ முடியும், சாதிக்க முடியும் எனும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே இவ்வாறான குறைபாடுகளால் குழம்பிக் கொள்ளாமல் மாற்றுத்திறனாளிகளை நாங்கள் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவதன் ஊடாக அவர்களை சமூகத்தில் எல்லோருக்கும் சமமான பிரஜைகளாக அதற்கும் மேலால் சாதனைகள் மிக்க வீரர்களாக மாற்ற முடியும் என்றார்.
No comments:
Post a Comment