கடந்த கால வேலைத்திட்ட நிதியை உடன் விடுவிக்குக! அரச அதிபருக்கு மாவை கடிதம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

கடந்த கால வேலைத்திட்ட நிதியை உடன் விடுவிக்குக! அரச அதிபருக்கு மாவை கடிதம்

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்குபற்றவில்லை. ஆயினும், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப் பெறாத வேலைத் திட்டங்ளுக்குரிய நிதியை விடுவிப்பதற்கு தீர்மானம் ஒன்றை முன்வைக்குமாறு எழுத்தில் மாவட்ட செயலரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான நா.வேதநாயகனுக்கு அனுப்பியிருந்தார்.

அவரது தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு பின்வரும் விடயங்களை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் உட்படுத்திப் பொருத்தமான தீர்மானத்தை எடுத்து நிறைவேற்றுமாறு கோருகின்றோம். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் (2019) நடைபெற்ற பின்வரும் அபிவிருத்திச் செயற்பாடுகளின் நிதி விடுவிக்கப்படாமையால் மக்கள் மீள்குடியேற முடியாத நிலையுடன் ஒப்பந்தகாரர்களும் தமது தொழில் முயற்சிகளை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான நிலைக்குள்ளாகி உள்ளனர்.

இவை முன்னுரிமைக்குரியவை. விடுவிக்கப்பட வேண்டிய தொகை 

01. வீட்டுத்திட்டம் 2,457,000,000.00/=, 

02. நீர் மலசலகூட வசதிகள் 62,000,000.00/=

03. உள்ளக வீதி திருத்தம் 213, 000,000.00/=

04. கல்வி 112,000,000.00/=

05. சுகாதாரம் 27,000,000.00/=

06. மின்சார வசதிகள் 21,000,000.00

07. நிலமற்ற குடும்பங்களுக்கு காணி 17,000,000.00/= கொள்வனவு (மீள்குடியேற்றம்)

08. வாழ்வாதாரம் 2,000,000.00/=

09. சனசமூக நிலைய கட்டமைப்புக்கள் 9,000,000.00/=

10. உட்கட்டமைப்பு அபிவிருத்தி | 97,000,000.00

மேலும் யாழ்.மாவட்டத்தில் கட்டுமான, நிர்மாணப் பணிகளுக்காக நிதி தேவைகளிருப்பின் அவைகளை முன்வைத்துத் தேவையான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

மேற்படி முன்மொழிவுகளும் திட்டங்களும் சென்ற ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டனவாகும். 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையாலும் 2019 நவம்பர் 16 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றமையாலும் தொடர்ந்து பாராளுமன்றில் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தினாலும் மேற்படி முன்மொழிவுகளுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை.

எனவே இவற்றுக்கான நிதிகள் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைச்சரவையினாலும் தேவையான நிதியினை விடுவிக்கப்படாமையால் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பெருந்துன்பங்களை அடைந்துள்ளனர்.

எனவே இந்த நிதி விடுவிப்புச் சம்மந்தமாக தற்போதைய பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ அவர்களுடன் நானும் திரு. சுமந்திரன், பா.உ அவர்களும் 23/01/2020 கலந்துரையாடிய போது “கடந்த அரசு இவற்றிற்கான நிதி எவற்றையும் விட்டு வைக்கவில்லை. அதனால் அரசு இக்கட்டான நிலையில் உள்ளது என்றும் அதற்காக பாராளுமன்றத்தில் தேவையான நிதி பெறும் வகையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க உள்ளேன்” என்றும் கூறினார். இவ்வாறான செயற்பாடு ஒன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுமாயின் எமது ஒத்துழைப்பு கிடைக்குமென்பதை கூறுவதோடு இந்த நிதியை விடுவிப்பதற்கு ஒர் தீர்மானமொன்றை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிலும் இன்று நிறைவேற்றி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். நாமும் பிரதமர் நிதி அமைச்சரிடமும், ஜனாதிபதியிடமும் தொடர்ந்தும் பேசவுள்ளோம். இவ்விடயங்கள் தொடர்பில் தற்போதைய ஆளுநருடனும் பேசியுள்ளோம்.

மீள்குடியேற்ற செயற்பாடுகள் தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதனால் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்ட போதும் அதைப் பயன்படுத்தும் மக்கள் வாழும் மயிலிட்டித்துறை வடக்கு (ஜே/251), மயிலிட்டித்துறை தெற்கு (ஜே/248), மயிலிட்டி வடக்கு (ஜே/246) நிலங்கள் விடுவிக்கப்படாமையால் மீள்குடியேற்றத்திற்கு பதிவு செய்த 539 குடும்பங்கள் மீள்குடியேறாத நிலையில் இருப்பதோடு அவர்களின் தொழிலைச் செய்யமுடியாது நலன்புரி நிலையங்களில் தொடர்ந்தும் வசித்து வருகின்றனர்.

அத்துடன் 2. பலாலி பிரதான வீதியின் கிழக்குப் பக்கமாக உள்ள பலாலி வடக்கு (ஜே / 254), பலாலி கிழக்கு (ஜே/ 253), பலாலி தெற்கு (ஜே 252), வசாவிளான் கிழக்கு (ஜே/245), வசாவிளான் மேற்கு (ஜே/244) ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படாமையால் 2000 குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகிறது. எனவே இந் நிலங்களை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் ஒன்றையும் அவ்வாறு இத்தனை ஆண்டுகளிலும் வாழ்வாதாரம் வழங்கப்படாமல் விடப்பட்ட நிலைமையும் கருத்திற்கொண்டும் தீர்மானம் எடுக்க வேண்டும். 3. யாழ்.பலாலி விமான நிலையத்திற்கான போக்குவரத்து வசதிகளின் பொருட்டு கட்டுவன் - மயிலிட்டி மற்றும் விமான நிலையத்திற்குத் தெற்காக தெல்லிப்பளை வசாவிளான் பிரதான பெரு வீதியையும், விமான நிலையத்திற்கு வடக்கே பருத்தித்துறை பலாலி - காங்கேசன்துறை - கீரிமலைக்கு அண்மித்த வீதியையும் திறந்து விடுவதற்கும் (3அ) யாழ் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென கையகப்படுத்தி நிலங்களின் சொந்தக்காரருக்கு நிவாரணம் வழங்கவும். 4. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குரிய 724 ஏக்கர் நிலத்தில் 330 ஏக்கர் தொழிற்பேட்டை மற்றும் தொழில்நுட்ப தொழில் முயற்சிகளுக்கு முதலீடு செய்வதன் பொருட்டு அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கவும். 5. வேலையற்ற இளைஞர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் தகுதியடிப்படையில் வழங்கப்பட்ட தொழில் நியமனங்களை மீண்டும் வழங்கவும் ஏதுவான தீர்மானங்களையும் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். என்றுள்ளது.

No comments:

Post a Comment