பிணைமுறி மோசடி தடயவியல் அறிக்கையினை கண்டு அஞ்சுகின்றார்கள் - அரசியல்வாதிகள் நெருங்கிய நண்பர்களாக சுகபோகமாக வாழ்கின்றார்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2020

பிணைமுறி மோசடி தடயவியல் அறிக்கையினை கண்டு அஞ்சுகின்றார்கள் - அரசியல்வாதிகள் நெருங்கிய நண்பர்களாக சுகபோகமாக வாழ்கின்றார்கள்

(இராஜதுரை ஹஷான்) 

ஜனாதிபதி மற்றும் பிரதமரால் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர முடியுமா. மஹிந்த ராஜபக்ஷவும், ரணில் விக்ரமசிங்கவும் நெருங்கிய நண்பர்கள். ஆகவே இரு தரப்பு திருடர்களும் ஒருபோதும் தண்டிக்கப்படமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

நாட்டு மக்களுக்கு திருடர்கள் குறித்து பிரச்சினை கிடையாது திருடர்கள் எந்த பக்கம் இருக்கின்றார்கள் என்பதை கொண்டு விமர்சனங்கள் எழுப்பப்படும். இன்று மக்களின் அடிப்படை பிரச்சினைகள் எனது தனிப்பட்ட விடயங்களை மையப்படுத்தி பிரதான ஊடகங்களினால் மறைக்கப்பட்டு வருகின்றன. இவை சாதாரண மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகும். 

பிரதான ஊடகங்கள் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் எனது தனிப்பட்ட விடயங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து பல உண்மைகளை மக்கள் மத்தியில் இருந்து தொடர்ந்து மறைத்து வருகின்றன. இன்னும் சில ஊடகங்களின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கனவாகவே காணப்படுகின்றன. 

ஆட்சிக்கு வந்தவுடன் பிணைமுறி மோசடி குற்றவாளிகளை ஒரு மாத காலத்திற்குள் தண்டிப்பதாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்கள் இன்று பிணைமுறி மோசடி தொடர்பான தடயவியல் அறிக்கையினை கண்டு அஞ்சுகின்றார்கள். 

அதாவது 2001 ஆம் ஆண்டில் இருந்து முறிகள் விநியோகத்தில் மோசடி இடம் பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. பிணைமுறி கொடுக்கல் வாங்கள் மோசடியாளர்கள் இரு தரப்பிலும் உள்ளார்கள். 

ஆகவே இரு தரப்பினரும் தண்டிக்கபட வேண்டும். அதில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரம் விதிவிலக்கல்ல. இன்று திருடர்கள் இரு தரப்பிலும் அஞ்சுவதை காணக்கூடியதாக உள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் இன்றும் நெருங்கிய நண்பர்கள் அரசியல்வாதிகள் வெளியில் எதிரிகளாக செயற்படுவதாக காட்டிக் கொண்டு நெருங்கிய நண்பர்களாக சுகபோகமாகவும் வாழ்கின்றார்கள். 

சாதாரண மக்கள் மாத்திரம் அரசியல் காரணிகளை கொண்டு பிளவுபட்டுள்ளார்கள். பிணைமுறி மாத்திரமல்ல எந்த மோசடியுடன் தொடர்புடையவர்களும் தண்டிக்கப்படமாட்டார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment