மஹிந்தவின் ஆட்சியில் பிணைமுறி மோசடி இடம் பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை - கடந்த அரசாங்கம் முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகள் பயனற்றவையாகும் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2020

மஹிந்தவின் ஆட்சியில் பிணைமுறி மோசடி இடம் பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை - கடந்த அரசாங்கம் முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகள் பயனற்றவையாகும்

(இராஜதுரை ஹஷான்) 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் மோசடி இடம் பெற்றுள்ளதாக தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. மோசடி தொடர்பில் கடந்த அரசாங்கம் முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகள் பயனற்றவையாகும். என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். 

கடந்த அரசாங்கத்தில் அதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான 2005 தொடக்கம் 2014 வரையிலான காலப்பகுதியில் மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் மோசடி இடம்பெற்றதாக பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தினர் 2015 ஆம் ஆண்டு காலம் தொடக்கம் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்ததார்கள். 

கடந்த அரசாங்கத்தில் பிணைமுறி மோசடி இடம் பெற்றதாக 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கவில்லை. எமது ஆட்சியில் பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் மோசடி இடம் பெறவில்லை என்பதை மத்திய வங்கியில் ஆளுநர் பதவி வகித்த என்னால் ஆதார பூர்வமாக குறிப்பிட முடியும். 

இவ்விடயத்தை ஏற்கெனவே ஊடக சந்திப்பின் ஊடாக தெளிவுப்படுத்தியுள்ளேன். வெளிப்படுத்திய எமது தரப்பு ஆதாரங்கள் தொடர்பில் கடந்த அரசாங்கம் எவ்விதமான கருத்தினையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை. 

மத்திய வங்கியில் பிணைமுறி மோசடி குறித்து 2015 ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகள் பயனதற்றது என்றே குறிப்பிட வேண்டும். இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளில் மோசடியுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருப்பினும் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றன. 

மோசடியுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் விதத்தில் விசாரணைகள் அமையவில்லை மாறாக காலத்தை வீணடிக்கும் விதமாகவே விசாரணை நடவடிக்கைகள் காணப்படுகின்றன. எமது நிர்வாகத்தில் பிணைமுறி மோசடி இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு விரைவில் தக்க பதிலடியை வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment