முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த மருதங்குளத்தினை புனரமைப்பதற்குரிய மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அதற்கான வேலைகள் முனனெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனிக்குளம் நீர்ப்பாசனத்தின் கீழ் உள்ள மருதங்குளம் கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்துள்ளது. மேற்படி குளமானது சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய குளமாகக் காணப்படும்.
இக்குளத்தின் நீர்க் கொள்ளளவானது 9 அடி 6 அங்குலமாக காணப்பட்ட நிலையில் குளத்தின் வான் பகுதியில் பாரிய உடைவு ஏற்பட்டதனால் குளத்து நீர் வெளியேறி தற்போது 4 அடி 4 அங்குலமான நீரையே தேக்கக்கூடியாதாக உள்ளது.
தற்போது காலபோக நெற் செய்கையில் பாதிப்புக்கள் ஏற்படாத போதும் சிறுபோகச் செய்கையே பாதிக்கப்படும் நிலை காணப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பில் நீரப்பாசனத் திணைக்களம் கருத்து தெரிவிக்கையில், மேற்படி குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டதாலும் குளத்தின் வான் பகுதியில் ஏற்பட்ட நீர்க்கசிவு காரணமாகவும் இவ்வுடைவு ஏற்பட்டுள்ளது.
இதனைத்தடுப்பதற்கு படையினர் நீர்ப்பாசனத் திணைக்களம் விவசாயிகள் முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்கி இதனைத் தடுக்க முற்பட்ட போதும் உடைவேற்பட்டுள்ளது. அதாவது இக்குளத்தினைப் புனரமைப்பதற்கு 125 மில்லியன் ரூபா தேவையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தன் நிருபர்

No comments:
Post a Comment