கடலில் கழிவுகளை கொட்டுவதை தடை செய்யும் ஒழுங்கு விதிகள் - சபையில் இன்று விவாதம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2020

கடலில் கழிவுகளை கொட்டுவதை தடை செய்யும் ஒழுங்கு விதிகள் - சபையில் இன்று விவாதம்

நாட்டின் நீர்ப்பரப்புக்குள் கைத்தொழில் அல்லது வீட்டுக் கழிவுகளை அகற்றுவதைத் தடை செய்வது உள்ளிட்ட கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஒன்பது ஒழுங்கு விதிகள் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இது தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

இலங்கையின் நீர்ப்பரப்பில் உள்ள மீன் இனங்கள் மற்றும் கடல் வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நேரடியாக அல்லது மறைமுகமாக கைத்தொழில், வீட்டுக் கழிவுகளை கொட்டுவது, நீர்பரப்புக்களினுள் மீன் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்களிற்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் கழிவை, வெளிக் கழிவுப் பொருளை கொட்டுதல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்பரப்பை நிரப்புதல் அல்லது மீட்டெடுத்தலும் இதன்மூலம் தடைசெய்யப்படுகிறது.

1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதிய 948/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 1996 ஆம் ஆண்டு மீன்பிடித் தொழிற்பாட்டு ஒழுங்கு விதிகளும் இன்றைய தினம் திருத்தப்படுகின்றன.

அதேநேரம், மீன்பிடித்தலின் போது ஈட்டிகளைப் பயன்படுத்தல், ஈட்டி பொருத்தப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தல் அல்லது தம்வசம் வைத்திருத்தல் அல்லது வள்ளத்தில் வைத்திருத்தலைத் தடுக்கும் ஒழுங்கு விதியும் இன்றைய தினம் முன்வைக்கப்படுகிறது.

அத்துடன் நாட்டின் நீர்ப்பரப்புக்களுள் தம்புவ மீன் இனங்களைப் பிடித்தல், தம்வசம் வைத்திருத்தல், இடம் பெயர்த்தல், கொள்வனவு செய்தல், விற்பனைக்காக காட்சிக்கு வைத்தல், விற்றல் அல்லது ஏற்றுமதி செய்தல் என்பவற்றைத் தடுப்பது தொடர்பான ஒழுங்கு விதியும் இன்று விவாதிக்கப்படும் ஒழுங்கு விதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1996ஆம் ஆண்டின் இரண்டாம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான இந்த ஒழுங்கு விதிகளை கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

No comments:

Post a Comment