லிபியாவில் அமைதித் தீர்வு ஒன்றுக்கு பெர்லின் மாநாட்டில் சர்வதேச சக்திகள் முழுமையான உறுதிப்பாட்டை வழங்கியதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் தற்போது இடம்பெற்று வரும் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதில்லை என்றும் அந்நாட்டின் மீதான ஐ.நாவின் ஆயுதத் தடையை கடைப்பிடிக்கவும் உலகத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
லிபியாவில் பலம்மிக்க ஜெனரல் கலீபா ஹப்தர் மற்றும் ஐ.நா ஆதரவு அரசுக்கு இடையிலேயே மோதல் உக்கிரமடைந்துள்ளது. இந்த இரு போர் தரப்புகளும் ஜெர்மனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநாட்டில் பங்கேற்றபோதும் பரஸ்பரம் சந்தித்துக் கொள்ளவில்லை.
எனினும் இந்த இரு தரப்புகளுடனும் ஏனைய தரப்புகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜெர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மேர்கல் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் மேர்கலுடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான், பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மேர்கல் மற்றும் பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இராணுவ வழி இல்லை என்றும் அரசியல் தீர்வே ஒரே வழி என்றும் மேர்கல் இந்த மாநாட்டுக்குப் பின்னர் குறிப்பிட்டார்.
பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை நிறுத்துவதற்கு பிரதான சக்திகள் உறுதிபூண்டதாகவும் குட்டரஸ் இதன்போது தெரிவித்தார்.
எனினும் ஜெனரல் ஹப்தருக்கு ஆதரவான படையினர் நாட்டின் பிரதான துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் குழாய்களை மூடியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லிபியாவின் நீண்ட காலத் தலைவர் முஅம்மர் கடாபி 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டது தொடக்கம் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
ஜெனரல் ஹப்தரின் லிபிய தேசிய இராணுவம் கிழக்கு லிபியாவின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு திரிபோலியை தளமாகக் கொண்ட போட்டி அரசுக்கு எதிராக கடந்த ஏப்ரலில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தது.
ஹப்தர் படையால் இதுவரை தலைநகரை கைப்பற்ற முடியாதபோதும் இந்த மாத ஆரம்பத்தில் நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய நகரான சிர்த்தை கைப்பற்றியது.
இந்த மோதல்களால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா குறிப்பிடுகிறது.
ஹப்தர் படைக்கு ரஷ்யா, எகிப்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜோர்தான் நாடுகள் ஆதரவு அளிப்பதோடு திரிபோலி அரசுக்கு ஆதரவாக துருக்கி தனது துருப்புகளை அங்கு அனுப்பியுள்ளது.

No comments:
Post a Comment