சுவீஸ் தூதுரகத்தின் ஊழியர் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு தகவல்கள் தெரிந்திருந்தால் அவர் சட்டத்துறையை நாட முடியுமென முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஊடகவியலாளர் மாநாடொன்றில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுவீட்சர்லாந்து தூதுரக ஊழியர் அரசாங்கத்தினால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவரது வாய்க்குள் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளதால் அவர் கோமா நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இது உண்மையானால் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் அவர் அந்த பெண்மணியை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பில் அவருக்கு தெரிந்திருந்தால் உடனடியாகவே சட்ட நடவடிக்கைக்கு செல்லலாமே என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நிலையான அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ராஜித சேனாரத்ன மிக மோசமான அரசியல் நடத்துகின்றார்.
அமைதி, சமாதானம் சுதந்திரம் நாட்டில் நிலவும் நிலையில் சர்வதேச நாடுகளில் இலங்கையை காட்டிக்கொடுப்பதற்கான செயற்பாடே இது.
தேர்தலுக்கு முன்னரும் பல்வேறு குற்றச்சாட்டுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சுமத்தப்பட்டுவந்த ராஜித சேனாரத்ன தாடிக்காரர் இருவரை கூட்டி வந்து மனிதர்களை முதலைக்கு இரையாக்கியதாக கதையொன்றைப் பற்றி பெரும் நாடகத்தையே நடத்திவிட்டார்.
இப்போது மீள அரசாங்கத்தை மோசமாக சர்வதேசத்திற்கு காட்டும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். ஊடகங்கள் இதனை சாதாரணமாக பார்க்க கூடாது. அவருக்கு எதிராக உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment