(செ.தேன்மொழி)
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து 100 நாட்களுக்குள் செயற்பட்ட விதம் தொடர்பிலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் தற்போது செயற்படும் விதம் தொடர்பிலும் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் எந்த வித செயற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் மக்களை பொதுத் தேர்தலின் போது இந்த விடயங்கள் தொடர்பில் நன்கு சிந்தித்து செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் குறைவான அங்கத்துவர்களையே பிரதிநிதித்துவம் படுத்தியிருந்த போதிலும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சிறந்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருந்தது.
ஆட்சியமைத்து 100 நாட்களுக்குள் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தை மேற்கொண்டதுடன், அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பையும் வழங்கியது. நல்லாட்சி அரசாங்கத்தின் போதே சுயாதீன ஆணைக்குழுக்கள் பல உருவாக்கப்பட்டன. எரி பொருட்களின் விலையையும் குறைக்கப்பட்டது.
இதேவேளை 1994 ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்று வந்த ஜனாதிபதி தேர்தல்களின் போது ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், அதனை யாரும் உரிய முறையில் நிறைவேற்றவில்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அவை பாராளுமன்றத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டன.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பிலும், தேர்தலுக்கு பின்னர் அதில் எவ்வித மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். தற்போது பெரும் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற் சங்கங்கள் எப்போதும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு குரல் கொடுத்தே பழக்கப்பட்டு விட்டன. தாங்கள் கேட்ட அனைத்தும் நிறைவேறி விட்டதுப்போல் தற்போது அமைதியாக இருக்கின்றன.
எதிர்வரும் மாதங்களில் எரி பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. மக்கள் தொடர்ந்தும் கண்மூடித்தனமாக செயற்பட்டால் பெரும் பொருளாதார சிரமத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும். மக்கள் இந்த விடயங்களை நன்கு கருத்திற் கொண்டே பொதுத் தேர்தலின் போது தீர்மானம் எடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment