இரு போட்டிகளைக் கொண்ட பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் திமுத் கருணாரத்ன தலைமையில் டிசம்பரில் இடம்பெறவுள்ள குறித்த தொடரில் விளையாடுவதற்கு நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்க்க அசந்த டி மெல் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களை நம்பிக்கை வைத்துள்ள தேர்வுக்குழு, சுரங்க லக்மால், லஹிரு குமார, விஸ்வ பெனாண்டோ, கசுன் ராஜித ஆகிய பந்துவீச்சாளர்களை இவ்வணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதில் கசுன் ராஜிதவைத் தவிர, ஏனைய மூவரும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்கான டெஸ்ட் அணியில் விளையாடியிருந்தனர்.
தற்போது அணியில் இணைக்கப்படும் கசுன் ராஜித, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் போர்ட் எலிசபெத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்டில் விளையாடியிருந்தார்.
இதில், முதல் இன்னிங்சில் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜித, இரண்டாம் இன்னிங்ஸில் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தனது பந்துவீச்சு பாணியின் சரியான தன்மை தொடர்பில் சிக்கலை எதிர்கொண்ட அகில தனஞ்சயவுக்குப் பதிலாக, இணைக்கப்பட்டுள்ள கசுன் ராஜிதவைத் தவிர, 16 பேர் கொண்ட இந்த டெஸ்ட் குழாமில் இணைக்கப்பட்டுள்ள ஏனைய வீரர்கள் நியூஸிலாந்து தொடரில் விளையாடியவர்களாவர்.
குறித்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்களைத் தவிர, மூன்று சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேராவுடன் லக்ஷான் சந்தகன் மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோரை அணியில் இணைக்க தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை டெஸ்ட் அணியை இலக்கு வைத்து கடந்த 2009 மார்ச் 03ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், சர்வதேச டெஸ்ட் அணி ஒன்று பாகிஸ்தானில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி ஆரம்பமாகும் இரு நாடுகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியாகும்.
குறித்த தீவிரவாத தாக்குதலின்போது அணியில் இருந்த வீரர்களில் ஒரேயொரு வீரர் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் ஆவார்.
திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை டெஸ்ட் அணி டிசம்பர் 08ஆம் திகதி பாகிஸ்தான் புறப்பட்டு டிசம்பர் 11 ஆம் திகதி ராவல்பிண்டியில் இடம்பெறும் முதல் டெஸ்ட் போட்யில் பங்கேற்கவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 19 ஆம் திகதி கராச்சி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இத்தொடரின் முதல் கட்டமாக 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடர்கள், கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பாகிஸ்தானில் இடம்பெற்றது. ஒரு ஒருநாள் தொடரில் 2–0 என இலங்கை அணி தோல்வியடைந்தாலும், ரி20 போட்டித் தொடரை 3-0 என, தசுன் ஷானக தலைமையிலான இலங்கை ரி20 அணி வெற்றியில் நிறைவு செய்தது.
இலங்கை டெஸ்ட் அணி: 1. திமுத் கருணாரத்ன (தலைவர்), 2. ஓஷத பெனாண்டோ, 3. குசல் மெண்டிஸ், 4. அஞ்சலோ மெத்திவ்ஸ், 5. தினேஷ் சந்திமால், 6. தனஞ்சய டி சில்வா, 7. நிரோஷன் திக்வெல்ல, 8. தில்ருவன் பெரேரா, 9 லசித் எம்புல்தெனிய, 10. சுரங்கா லக்மால், 11. லஹிரு குமார, 12. விஷ்வ பெனாண்டோ, 13. கசுன் ராஜித, 14. லக்ஷான் சந்தகன், 15. குசல் ஜனித் பெரேரா, 16. லஹிரு திரிமான்ன.
No comments:
Post a Comment