ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற, இன மத பேதங்களுக்கு அப்பால் நாட்டை கட்டியெழுப்பவுள்ள ஒருவருக்கே மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹன்துன் நெத்தி தெரிவித்தார்.
மூதூர் சேப் ரெஸ்ட் மண்டபத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலே இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவை எடுத்துக் கொண்டால் அவருக்கெதிராக பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
அவரால் இன்று யாழ்ப்பாணத்துக்குச் சென்று வாக்குக் கேட்க முடியாது. கொலை சம்பவம் தொடர்பில் அவருக்கு வழக்கு இருக்கின்றது. வசிம் தாஜுதினின் ஊருக்குச் செல்ல முடியாது. ஹம்பாந்தோட்டைக்குச் சென்று வாக்குக் கேட்க முடியாது.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சுக்கள், பொலிஸ், அரச நிறுவனங்கள், அரச ஊடகங்கள் அனைத்தும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன. சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த போன்றவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
நாட்டில் சகல இன மக்களும் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் அரசியல் அனுபவமும், எந்தவித கொலை, ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மாத்திரம்தான்.
இன்று எமது வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காக பல அமைப்புக்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. இதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சகல வியூகங்களும் அமைக்கப்படுகின்றன.
அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக வெற்றி பெற நாட்டு மக்கள் முன்வருவார்கள் என தாம் நம்புவதாக தெரிவித்தார்.
தோப்பூர் நிருபர்
No comments:
Post a Comment