மனிதன் மகிழ்ச்சியில்லாமல் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதற்கெல்லாம் ஒரே காரணம் பணம்தான் என கிழக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டுத்துறை, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜி.முத்துபண்டா தெரிவித்தார்.
உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனை ஏற்பாடு செய்த மாபெரும் சிறுவர் தின விழா நேற்றுமுன்தினம் (1) சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் பேசுகையில், பணத்தைக் கொடுத்து அன்பைப் பெறமுடியுமா? பாசத்தைப் பெறமுடியுமா? நட்பைப் பெறமுடியுமா? இல்லை.
ஆனாலும் பணம் பணம் என்று அலைகிறோம். இதனால் பிள்ளைகளை அரவணைக்க, அன்பு செலுத்த தவறுகின்றோம்.
அன்று தேவேந்திரமுனை தொடக்கம் பருத்தித்துறை வரை ஒரு பெண் தனியாக சுதந்திரமாக போய்வரமுடிந்தது. இன்று வீட்டில் ஒரு பெண் தனியாக இருக்க முடியாது. பஸ்ஸில் தனியாக செல்ல முடியாது ரயிலில் செல்லமுடியாது.
இதற்கு காரணம் குடும்பங்கள் உண்மையான பாசத்துடன் அரவணைப்புடன் வாழ்வதில்லை.
வீட்டுத்தலைவி அல்லது தலைவன் பணம் தேடி வெளிநாடு சென்றால் அக்குடும்பம் பாதுகாப்பிழக்கிறது. பிள்ளைகள் மணம் போனபோக்கில் வாழத் தலைப்படுகிறார்கள்.
அன்று பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களை படிக்கக் கொடுத்தார்கள். இன்று அனைவரது கைகளிலும் புத்தகம் இருக்கிறதோ இல்லையோ விலைகூடிய ஸ்மார்ட்போனிருக்கும்.
பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? என்று கேட்டால் சில வேளைகளில் பதிலளிக்க முடியாதநிலை தோன்றுகிறது. தொழிலுக்கான கல்வி வழிகாட்டல் எமது கல்வித் திட்டத்தில் இல்லாமையும் ஒரு குறைபாடாகவே காணமுடிகிறது.
இன்று பாடசாலையைவிட பிள்ளைகள் ரியுசனை பெரிதும் நம்பியுள்ளனர். இதற்கு காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும் என்றார்.
காரைதீவு நிருபர்
No comments:
Post a Comment