ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமை மற்றும் கடமைகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், மேலும் சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று (03) அறிவித்துள்ளார்.
இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் பெயர்களிலுள்ள வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலான தகவல்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறு கொழும்பு பிரதம நீதவான், வங்கி மற்றும் 80 நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பிலான அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பிரதம நீதவான், தொலைபேசி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தேவாலயங்களின் பாதிரியார்கள் உள்ளிட்ட சுமார 80 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் கொழும்பு பேராயர் உள்ளிட்ட சிலரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ், விசாரணைகள் இடம்பெறுகின்றன என நீதவான் பிரதி சொலிசிட்டரிடம் வினவியுள்ளார்.
கடமைகளை மீறியதால் இடம்பெற்ற தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கி கொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதி சொலிசிட்டர் இதன்போது கூறியுள்ளார்.
கொலைக் குற்றச்சாட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக சந்தேகநபர்களின் நிதி தொடர்பான அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கான தேவை என்னவென நீதவான் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுவரை கிடைத்த தகவல்களுக்கு அமைய, விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் நிதி தேவைக்காக, கடமைகள் மீறப்பட்டதாக என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே வங்கிக் கணக்குகளின் அறிக்கையை பெற்றுக் கொள்ளவுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்த விசாரணைகள் தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment