முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிசிச்சைகளுக்காக சிங்கப்பூருக்கு செல்வதற்காக கோட்டாபய ராஜபக்ஸ அனுமதி கோரியிருந்தார். விசேட மேல் நீதிமன்றம் இன்று (03) இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இதற்கமைய இம்மாதம் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை சிகிச்சை நிமித்தம் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் கடவுச்சீட்டை கையளிக்குமாறு இதன்போது நிரந்த விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. எவ்வாறாயினும், சட்டமா அதிபர் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
நாடு திரும்பியதன் பின்னர் வௌிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதியரசர்கள் கொண்ட நீதிபதிகள் குழாம் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை குடிமகனாக கோட்டபய ராஜபக்ஷவை அங்கீகரிப்பதை இடைநீக்குவது தொடர்பான உத்தரவு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (03) பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் பரிசீலனை செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக ஏற்பதை இடைநிறுத்தி, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு உத்தரவொன்றை வழங்குமாறு, பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர மற்றும் புரவெசி பலய அமைப்பின் இணை அழைப்பாளரும் சமூக ஆர்வலருமான காமினி வியங்கொட ஆகியோர், மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment