ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது? - சுயாதீனக்குழு தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணியை ஆரம்பித்தது - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 2, 2019

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது? - சுயாதீனக்குழு தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணியை ஆரம்பித்தது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், புலமைசார் வல்லுநர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்ட சுயாதீனக்குழு தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.

மேற்படி சுயாதீன குழுவில், சுவாமி சிதாகாசானந்தா (சின்மயா மிஷன், யாழ்ப்பாணம்), அதிமேதகு பொன்னையா ஆண்டகை (ஆயர் திருகோணமலை மறை மாவட்டம்), தென் கயிலை ஆதீன சுவாமிகள் தவத்திரு அகத்தியர் அடிகளார், அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் (குருமுதல்வர் யாழ். மறை மாவட்டம்), சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கம் (சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர்) பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் (தலைவர், அரசறிவியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்), கலாநிதி கு. குருபரன் (தலைவர், சட்டத்துறை, யாழ். பல்கலைக்கழகம்), திருமதி. கோசலை மதன் (விரிவுரையாளர், சட்டத்துறை யாழ். பல்கலைக்கழகம்), திரு. நிலாந்தன் (அரசியல் ஆய்வாளர்), திரு. குருநாதன் (சமூக செயற்பாட்டாளர், மட்டக்களப்பு), திரு. கஜன் (சமூக செயற்பாட்டாளர், திருகோணமலை), வைத்திய கலாநிதி சிவபாலன் (மருத்துவர், யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவை எடுக்கும் வகையில் மேற்படி சுயாதீன குழுவின் அங்கத்தவர்கள் நேற்று (02) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பு சுமார் 3 மணித்தியாலங்கள் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனான சந்திப்பும் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கட்சியின் செயலாளர் செ. கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி சுகாஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

மேற்படி 2 சந்திப்புக்களிலும் சுயாதீனக் குழுவின் சார்பில் யாழ் சின்மயா மிஷன் சுவாமி சிதாகாசானந்தா, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதிமேதகு பொன்னையா ஆண்டகை, தென் கயிலை ஆதீன சுவாமிகள் தவத்திரு அகத்தியர் அடிகளார், யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார், சட்டத்தரணியும் சமூக மற்றும் அரசியல் ஆய்வாளருமான சி.அ.ஜோதிலிங்கம், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சமூக செயற்பாட்டாளர் கஜன், வைத்திய கலாநிதி சிவபாலன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த 2 சந்திப்புக்களும் சுமுகமாக இடம்பெற்றன. இதேவேளை இன்று (03) நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியினருடனான சந்திப்பு இடம்பெறும். தொடர்ந்து ஏனைய அரசியல் கட்சிகளுடனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையால் அமைக்கப்பட்ட குழுவானது சுயாதீனமாக இயங்கும் என்பதுடன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்திஜீவிகள், புலமைசார் வல்லுனர்களை குழுவில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் சுயாதீனக் குழு மேற்கொள்ளும் எனவும் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(யாழ். நிருபர் பிரதீபன்)

No comments:

Post a Comment