நெவில் பெர்ணாந்து வைத்தியசாலை அரசின் கீழ் சுவீகரிக்கப்பட்டது. அது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கடந்த 24ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலமளித்தார். இதனை அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
'நெவில் பெர்ணாந்து வைத்தியசாலை', "கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலை" என்ற பெயரில் சுவீகரித்துக்கொள்ள 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரமொன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றது.
அமைச்சரவை அனுமதிப்பத்திரத்தை ஆணைக்குழுவுக்கு பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரட்ன, ஆணைக்குழுவில் ஆஜராகிய தினத்தன்று அமைச்சரவையின் செயலாளருக்கு பணிக்கப்பட்டுள்ளது. மறுநாள் 25ஆம் திகதி அமைச்சரவை அனுமதிப்பத்திரம் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முறையாக வைத்தியசாலையை அரசுக்கு சுவீகரிக்க வேண்டும். நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்தப் பணியை முன்னெடுக்க வேண்டுமென ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் உபாலி அபேவர்தன இதன்போது கூறியுள்ளார்.
2017ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபை கடிதமொன்றை அனுப்பி, அமைச்சரவை அனுமதியூடாக வைத்தியசாலையை அரசுடமையாக்க முடியுமென கூறியுள்ளது. அப்போதைய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அந்த விடயம் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 4 வருடகாலப் பகுதியில் 5 பேர் சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்துள்ளனர். அதன் காரணமாக பிரச்சினைகள் இருந்தன.
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையான இரண்டு வருடக்காலப் பகுதில் 4,95,000 பேர் இலவச சுகாதார சேவையை பெற்றுக்கொண்டுள்ளனர். குறித்த காலப்பகுதியில் வைத்தியசாலையின் தேவைக்கான நிதி மாத்திரமே செலவிடப்பட்டதுடன், மேலதிகமாக எவ்வித நிதியும் செலவழிக்கப்படவில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ண ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், வைத்தியர் நெவில் பெர்ணாந்துவின் கடன்களையோ அல்லது வைத்தியசாலையின் கடனையோ அல்லது அவருக்கு எவ்வித நிதியும் செலுத்தப்படவில்லையென ஆணைக்குழுவில் விளக்கமளித்துள்ளனர்.

No comments:
Post a Comment