போரின் பின்னர் படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். இறுதியாக ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுக்களின் பிரகாரமும் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் எஞ்சிய காணிகளை விடுவிப்பேன் என்ற வாக்குறுதிக்கும் அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா.
கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகள் மற்றும் மாவட்டங்கள் ரீதியாக முழுமையான தகவல்களை ஆளுநரிடத்தில் முன்வைத்து அவற்றை விடுவிப்பது தொடர்பில் உரிய தரப்பினைரையும் அழைத்து ஆராயவுள்ளோம்.
வலி.வடக்கில், தெற்கில் விடுவிக்கப்படாதிருக்கும் காணிகள் மற்றும் பலாலி விமான நிலையத்திற்கு அவசியமாகவிருக்கும் காணிகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தவுள்ளோம் - என்றார்.
இதேவேளை, கீரிமலையில் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை நட்சத்திர சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு அதனை மத்திய, மாகாண கூட்டு நிருவாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் படையினரிடத்தில் உள்ள காணிகளை விடுப்பது தொடர்பான மாவட்ட ரீதியான மீளய்வு கூட்டங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன.
யாழ்.மாவட்டத்தில் விடுவிக்கப்படாதுள்ள காணிகள் பற்றி மீளாய்வுக் கூட்டம் யாழ். ஆளுநர் அலுவலகத்திலும், வன்னி மாவட்டத்திற்கான கூட்டம் கிளிநொச்சியிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment