நாட்டின் நீதி கட்டமைப்பில் தற்போது குவிந்து கிடக்கும் வழக்குகளை முறைப்படுத்தி துரிதப்படுத்த தன்னியக்க மற்றும் வீடியோ தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல நேற்று தெரிவித்தார்.
பிரதேச அபிவிருத்தி பணிகள் மற்றும் கட்சியின் புனரமைப்பு பணிகள் குறித்த கலந்துரையாடலின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை நீதிமன்ற கட்டமைப்பை தன்னியக்க முறைமைக்கு உட்படுத்துவதுடன், சாட்சி விபரங்களை ஒலி, ஒளிப்பதிவு மூலம் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களை போன்று பழைய நிலையிலிருக்கும் நீதிமன்ற கட்டமைப்பில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த அவசியமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன் நீதிமன்றங்களில் தற்போது தேங்கிக்கிடக்கும் வழக்குகளை துரிதப்படுத்தும் முகமாக நாட்டிலுள்ள நீதிமன்றங்களின் எண்ணிக்கையை பல்வேறு கட்டமைப்புக்களில் மாற்றியமைத்திருக்கின்றோம்.
இதன்மூலம் நீதிமன்றங்களில் குவிந்திருக்கின்ற சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகளை விசாரித்து துரிதமாக தீர்ப்புகளை வழங்குவதே இந்நடவடிக்கைகளின் நோக்கமாகும்.
பொலன்னறுவை, முல்லைத்தீவு மாங்குளம், கிளிநொச்சி, அநுராதபுரம் ஆகிய இடங்களிலும் நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
மேல் நீதிமன்றம் இல்லாத மாத்தளை மாவட்டத்திற்கும் ஒரு மேல் நீதிமன்றத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் நீதிமன்ற நீதிபதிகள், உத்தியோகத்தர்களுக்கு அவசியமான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் நாம் உரிய பங்களிப்புக்களை வழங்கியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
(இரத்தினபுரி நிருபர்)

No comments:
Post a Comment