முல்லைத்தீவு - செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்த கேணிக்கு அருகில் பௌத்த மதகுருவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமையை கண்டித்தும், நீதிமன்றம் அவமதிக்கப்பட்டமை மற்றும் சட்டத்தரணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டங்கள் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்றைய தினம் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இப்போராட்டத்தை வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களும் இணைந்து காலை 10 மணியளவில் மேற்கொண்டனர்.
இதன்போது “அரசே இன அடக்குமுறையை நிறுத்து, “அரசே இனங்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாதே, நீதி ஆழிகிறதா? அநீதி ஆழ்கிறதா?” என்பன போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறும் கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாகவும் மேற்படி அமைப்பினால் காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு அனுப்புவதற்காக மகஜர் ஒன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்தில் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி ஏ 9 பிரதான வீதியில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.
இதன்போது குறித்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சுலோகங்கள் ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். பெண்கள் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்கள் இணைந்து போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
மன்னாரிலும் மாவட்ட சமூக மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது.
நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதோடு, மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் கலந்துகொண்டனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.
பருத்தித்துறை, மாங்குளம், மன்னார் நிருபர்கள்

















No comments:
Post a Comment