"எனது ஆட்சியில் அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்."
இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.
முற்போக்கு தொழிற்சங்கங்களின் தேசிய மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது "எனது ஆட்சியில் சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனையற்ற தேசம் நிச்சயம் உருவாக்கப்படும்.
உலக சந்தையில் அதிக கேள்வியில் உள்ள தொழில்வாய்ப்புக்களை தற்போதைய அரசு இளம் தலைமுறையினர் மத்தியில் அறிமுகப்படுத்தவில்லை. இதுவே இன்றைய தொழில் இல்லாப் பிரச்சினைக்குப் பிரதான காரணம்.
நான் ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய காலத்துக்குள் நாட்டு மக்கள் சுயமாகப் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்குத் தேவையான செயற்திட்டங்களைச் செயற்படுத்துவேன். தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.
இந்த நாட்டில் மூவின மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசித்து நிம்மதியாக வாழ வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். அந்த நாள் தொலைவில் இல்லை.
முற்போக்கு தொழிற்சங்கங்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எனது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் அடிப்படைவாதிகளும், பயங்கரவாதிகளும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எனக்குக் கூடுதல் அக்கறையுள்ளது. இதன்காரணமாகவே மூன்று தசாப்தங்கள் நிலவிய போரை இரண்டரை வருடங்களில் நிறைவுக்குக் கொண்டுவந்தோம்.
எனவே, இந்த அரசால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் முற்போக்கு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
charles ariyakumar jaseeharan
No comments:
Post a Comment