மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காலு பகுதிக்கு டிப்பர் வாகனம் மூலம் கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (03) அதிகாலை புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இடம்பெற்றது.
புத்தளத்தைச் சேர்ந்த மூவின இளைஞர்களும் ஒன்று சேர்ந்து குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்று அதிகாலை (03) 12.10 மணிக்கு புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக ஒன்று௯டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், "கொழும்பை அழகுபடுத்தும் நோக்கில், புத்தளத்தை அசிங்கப்படுத்தாதே", "கொழும்பு குப்பை எமக்கு வேண்டாம்", "சீனக் குப்பை எமக்கு வேண்டாம்", "மலேசிய குப்பை எமக்கு வேண்டாம்", "எமது சூழல் எமக்கு வேண்டும்" "எமது பிள்ளைகளின் எதிர்காலம் எமக்கு வேண்டும்" இதுபோன்ற பல கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, புத்தளம் தலைமையக, வன்னாத்தவில்லு, முந்தல், நுரைச்சோலை கருவலகஸ்வெவ பொலிஸாருடன் இணைந்து, இராணுவம், பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, இராணுவ, கடற்படை, விமானப்படை உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.
அத்துடன், புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக கலகம் தடுக்கும் பொலிஸாரும், கண்ணீர் பிரயோக மேற்கொள்ளும் பொலிஸாரும் தயார் நிலையில் இருந்தனர்.
இதேவேளை, குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, கொழும்பில் இருந்து குப்பைகளை ஏற்றிக் கொண்டு சென்ற 20 இற்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்கள், நள்ளிரவு 12.25 மணி அளவில் புத்தளம் நகரை வந்தடைந்தன.
பாலாவி, தில்லையடி, புத்தளம் நகரம், புத்தளம் - மன்னார் வீதியில் இரு மருங்கிலும் துப்பாக்கி ஏந்திய பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், போக்குவரத்து பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புக்களுடன் குறித்த டிப்பர் வாகனங்கள் வன்னாத்தவில்லு அருவக்காலு பகுதிக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டன.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, இந்த அரசாங்கம் குப்பைகளை பலவந்தமாக புத்தளத்தில் கொட்டுவதற்கு எடுக்கும் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.
கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி மிகத் தெளிவான முறையில் அரசுக்கு எடுத்துக்காட்டியுள்ள போதிலும், மக்களின் உணர்வுகளை மதிக்காமல் திட்டத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கடும்போக்குடன் செயற்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.
அத்துடன், குப்பைகளை கொண்டுவரும் டிப்பர் வாகனங்களுக்கும், அதற்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்ற பாதுகாப்பு தரப்பினர்களுக்கும் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல், சட்டத்துக்கு முரணாக எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்காமல், சட்டரீதியான அணுகுமுறைகளை தாங்கள் கையாளப் போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது சூளுரைத்தனர்.
இந்த குப்பை விவகாரத்தில் அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் நம்புவதற்கு தாம் ஒருபோதும் தயாரில்லை எனத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், நீதித்துறையின் மீது மாத்திரமே தாங்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
நள்ளிரவு 12.10 க்கு ஆரம்பமான குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், 12.55 மணிக்கு நிறைவடைந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.
(புத்தளம் நிருபர் ரஸ்மின்)
No comments:
Post a Comment