“மனித அடிப்படை சுதந்திரங்களில் ஒன்று ஆடைச்சுதந்திரமாகும். எனினும் சமகாலத்தில் இந்த சுதந்திரம் முஸ்லிம் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நடைபெற்ற துன்பவியல் நிகழ்வின் பின்னர் அவசரகாலச் சட்டம் அமுல் படுத்தப்பட்டபோது முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை விவகாரம் விஸ்பரூபம் எடுத்து முகத்திரைக்கான தடை விதிக்கப்பட்டது.
எனினும் கடந்த 8ஆம் திகதி அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட்ட நிலையில் இந்த ஆடை அணிவது தொடர்பான விவகாரம் முற்றுப்பெறவில்லை. எனவே இது விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்க அரசியல் தரப்புகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது கடந்த காலங்களில் இது விடயத்தில் முஸ்லிம் அரசியல் தரப்புகள் அரசுடன் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்துவருகின்றன.
பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பினர் வசம் இருப்பதன் காரணமாக சமீபத்தில் முகத்திரையை அணிந்து சென்ற முஸ்லிம் பெண்கள் அசௌகரியத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.
இந்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையும் முகத்திரையை அணிந்து பொதுஇடங்களுக்கு செல்லாமல் காலநேர சூழலை அனுசரித்து சாதுரியமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எனினும் இது விடயத்தில் தீர்க்கமான ஒரு முடிவை எட்ட வேண்டியது அவசியமானது.
காலகாலமாக நமது மக்கள் அனுபவித்து வந்த மதச்சுதந்திரம் அந்த மக்களே விரும்பாத ஒரு சம்பவம் காரணமாக இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம்களின் கலாசாரமும் பண்பாடும் இன்று எடுப்பார் கைப்பிள்ளை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலை தொடருமானால் முஸ்லிம்களின் எதிர்காலம் கொத்தடிமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயமும் உள்ளது.
இந்நிலை மாற்றப்பட வேண்டும் இதற்கான காத்திரமான நடவடிக்கைகளை எமது அரசியல் தரப்பினர் உடன் மேற்கொள்ள வேண்டும். இதற்கான காலம் இப்போது நமக்கு கனிந்திருக்கிறது. இதனை சரியான முறையில் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - என்றுள்ளது.
No comments:
Post a Comment