கடல் சென்ற மூன்று மீனவரும் காணாமல் போய் பத்து நாட்கள் - சாய்ந்தமருது, காரைதீவில் ஏக்கத்துடன் உறவினர்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, September 27, 2019

கடல் சென்ற மூன்று மீனவரும் காணாமல் போய் பத்து நாட்கள் - சாய்ந்தமருது, காரைதீவில் ஏக்கத்துடன் உறவினர்கள்

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மூவர் கடந்த பத்து நாட்களாக வீடு திரும்பாத காரணத்தினால் அவர்களது குடும்பத்தினர் கலக்கத்துடனும் கவலையுடனும் உள்ளனர். 

கடந்த 18ஆம் திகதி காரைதீவு மாளிகைக்காட்டுத்துறையிலிருந்து ஆழ்கடலுக்கு இயந்திரப்படகில் மீன்பிடிக்கச் சென்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன் (வயது36), இஸ்மாலெவ்வை ஹரீஸ் (வயது37) மற்றும் காரைதீவைச் சேர்ந்த சண்முகம் சிறிகிருஷ்ணன் (வயது47) ஆகிய மூவரே இவ்விதம் காணாமல் போயுள்ளனர்.

அவர்கள் பத்து நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்று கூடத் தெரிவில்லை. இந்நிலையில் இவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகி, கவலையுடன் உள்ளன. 

இவ்வாறு பரிதாபத்துக்கு உள்ளானோரில் காரைதீவு 11ஆம் பிரிவைச் சேர்ந்த சண்முகம் சிறிகிருஷ்ணன் (வயது47) என்பவரின் குடும்பத்தினரும் உள்ளனர். காணாமல் போனவரின் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் பரிதாப நிலையில் உள்ளனர். 

அவரது மனைவி சோமசுந்தரம் ஆனந்தமலர் (வயது45) இவ்வாறு கூறுகிறார். 

எனக்கு 4 பிள்ளைகள். சதானா (வயது 22) உயர் தரம் தோற்றி 2 சி,1 எஸ் பெற்றவர். ஜீவிதா (வயது 19) இம்முறை உயர் தரம் தோற்றியவர். காயத்ரீ (வயது 17) தற்போது உயர் தரம் கணிதப் பிரிவில் பயின்று கொண்டிருக்கிறார். கடைசிப் பிள்ளை துஷாந்த் (வயது 07) இரண்டாம் வகுப்பு கற்கிறார். 

இவர்கள் நால்வருடன் இன்று நான் கண்ணீரில் காலத்தைக் கழிக்கிறேன். எமக்கு எல்லாமே அவர்தான். அவர் கடலுக்குச் சென்று கொண்டு வருவதில்தான் காலத்தைக் கடத்தினோம். பிள்ளைகளின் படிப்புச் செலவும் அதற்குள்தான். அவர் இல்லாமல் நாங்கள் என்ன செய்யப் போகின்றோமென்று தெரியவில்லை. 

சம்பவதினமான கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சாப்பாட்டுப் பொதியுடன் வீட்டை விட்டு புறப்பட்டு வழமை போல சாய்ந்தமருது மீனவர்களுடன் ஆழ்கடலுக்குச் சென்றார். 

மறுநாள் காலை வருவது வழக்கம். அவர் காலையில் வரவில்லை. நான் அவரது முதலாளியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன். 'இன்னும் படகு வரவில்லை' என்றார். மீண்டும் பகலில் கேட்டேன். அதே பதில் வந்தது. இரவாகியதும் எமக்கு பயம் தொற்றிக் கொண்டது. அழுதபடி இருந்தோம். 

தொலைபேசி எடுத்துக் கேட்ட போது 'படகு இன்னும் வரவில்லை. வேறொரு படகை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளேன். பார்ப்போம்' என்றார். 

மறுநாள் எமது உறவினர்கள் அங்கு சென்றார்கள். அவருடன் மேலும் இரண்டு முஸ்லிம் மீனவர்களும் சென்றவர்கள் வரவில்லை என்று தெரியவந்தது. அவர்கள் பொலிஸ் தொடக்கம் அரசியல்வாதிகள் வரை தொடர்புகொண்டு சொல்லியிருக்கிறார்கள். 

நாமும் சம்மாந்துறை பொலிசில் சென்று முறையிட்டுள்ளோம். எனது குடும்பம் முற்றுமுழுதாக அவரிலேயே தங்கியுள்ளது" என்று அழுகையுடன் கூறினார் அப்பெண். 

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும் உறுப்பினர்களான இ.மோகன், மு.காண்டீபன், சி.ஜெயராணி மற்றும் சமூக சேவையாளர் க.தம்பிராசா ஆகியோர் வருகை தந்து குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர். 

காரைதீவு பிரதேச சபைத் தீர்மானத்தின்படி முதற்கட்டமாக 10 ஆயிரம் ​ரூபாவை தவிசாளர் ஜெயசிறில் குடும்பத்திடம் கையளித்தார். 

அவர் அங்கு கூறுகையில் "இச்செய்தி கேள்வியுற்றதும் அறிவிக்க வேண்டிய இடங்களுக்கெல்லாம் அறிவித்தோம். இங்குள்ள ஆலயங்கள், பொது அமைப்புகள் காணாமல் போன 3 மீனவர்களையும் தேடுவதற்கும் குடும்பத்திற்கு உதவவும் முன்வர வேண்டும். பொதுமக்களும் பரோபகாரிகளும் இக்குடும்பத்திற்கு உதவ வேண்டும்" என்றார். 

இதுவரை காணாமல் போன மீனவர்களையும் படகினையும் தேடி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் ஏழரை இலட்ச ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. 

உறுப்பினர் மு.காண்டீபன் கூறுகையில் "நாம் காரைதீவுப் பிரதேச மீனவர்கள் அனைவரிடமும் இது பற்றிப் பேசி நிதி அறவிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். காணாமல் போன மூவரையும் தேடுவதற்கும், இக்குடும்பத்திற்கும் இந்நிதி பயன்படும். எனவே மீனவர்கள் மட்டுமல்ல யாரும் இதற்கு உதவலாம்" என்றார். 

இதேவேளை சிறிகிருஷ்ணனுடன் கடலுக்குச் சென்று காணாமல் போயுள்ள மற்றைய இரு மீனவர்களின் குடும்பங்களும் இவ்வாறுதான் கவலையில் மூழ்கியுள்ளன. காணாமல் ​போனவர்கள் எப்போது திரும்புவார்கள் என்று அவர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)

No comments:

Post a Comment