ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நேற்றைய மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியும் அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றார். அவர் சு.கவின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சிரித்த முகத்துடன் சம்பாசனையில் ஈடுபட்டமை அனைவரினதும் கவனத்தையும் கவர்ந்தது.
பண்டாரநாயக்க - ஸ்ரீமாவோவுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாத்து அதன் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய சந்திரிகா, 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கி அவரின் வெற்றிக்காகப் பல காய்நகர்த்தல்களை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் மேற்கொண்டிருந்தார்.
ஆனால், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரங்கேற்றப்பட்ட அரசியல் சூழ்ச்சியையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் மைத்திரிபால கைகோர்த்தார். இது சந்திரிகாவுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் ஆவேசமடைந்த அவர், மைத்திரியைப் பகிரங்கமாக விமர்சித்து வந்தார். தனது குடும்பமும் தானும் கட்டிக்காத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தற்போதைய தலைவரான மைத்திரி, மஹிந்த அணியிடம் அடகுவைத்துவிட்டார் எனவும் திட்டித் தீர்த்தார்.
தற்போது ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் அழைப்புக்கிணங்க அண்மையில் கட்சியின் தலைமையகத்துக்குச் சென்ற சந்திரிகா அங்கு பலருடன் பேச்சு நடத்தியிருந்தார். அதையடுத்து சு.கவின் நேற்றைய மாநாட்டிலும் அவர் கலந்துகொண்டுள்ளார்.
மாநாட்டில் அவர் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோருடன் சிரித்த முகத்துடன் உரையாடும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மஹிந்த அணியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துக் களமிறங்குமா? அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுமா? என்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சந்திரிகாவின் இந்தத் திடீர் மாற்றம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பலத்தையும், மஹிந்த அணிக்குப் பலவீனத்தையும் கொடுக்கும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
charles ariyakumar jaseeharan
No comments:
Post a Comment