வெளிநாட்டில் உள்ளோருக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கான அனுமதி வழங்கவில்லை - News View

About Us

About Us

Breaking

Friday, September 27, 2019

வெளிநாட்டில் உள்ளோருக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கான அனுமதி வழங்கவில்லை

வெளிநாட்டில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான உறுதி மொழிகள் எதனையும் தேர்தல்கள் ஆணையகம் இதுவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு வழங்கவில்லையென பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், வெளிநாட்டில் பணிப்புரியும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்க சந்தர்ப்பத்தை வழங்க வேண்டுமென கடந்த காலத்தில் பேசப்பட்டது. 

இந்த விடயம் தொடர்பில் நாம் தேர்தல்கள் ஆணையகத்துடன் பலசுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். அதேபோல் வெளிவிவகார அமைச்சுடனும் பேச்சுக்கள் நடத்தியுள்ளோம். ஆனால், தேர்தல்கள் ஆணையகம் இதுவரை எவ்வித உறுதி மொழிகளையும் எமக்கு வழங்கவில்லை. 

தேர்தல்கள் ஆணையாளர்தான் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். என்றாலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க முடியாது. 

அதன் பின்னரான தேர்தல்களில் வெளிநாட்டில் பணிப்புரிபவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதற்காக தேர்தல்கள் ஆணையாளரிடம் தொடர்ந்து பேச்சுகள் நடத்தப்படும் என்றார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment