வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை தொழில்வாண்மைமிக்கத் துறையாக மாற்றி, வெளிநாடு சென்று நாடு திரும்பிய பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவித்துள்ளமையாலும் பெண்கள் வெளிநாடு செல்வது 70 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், வெளிநாட்டு வேலைவாய்ப்புப்புத் துறையை வலுப்படுத்த கடந்த நான்கரை வருட காலமாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் காரணமாக அத்துறை மிகவும் பலமடைந்துள்ளதுடன், 7 பில்லியன் வருமானத்தை ஈட்டித்தந்துள்ளது.
சமகால அரசாங்கம் பெண்கள் வெளிநாடு செல்வதை குறைத்து நாட்டின் குடும்பக் கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்தது. அதற்காக பல்வேறு உபாயமார்கங்களையும், வேலைத்திட்டங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக நாம் முன்னெடுத்தோம்.
தொழில்வாண்மைமிக்க தொழிலாளர் படையை அதிக சம்பளத்துக்கு வெளிநாடுகளுக்கு அனுபுவதையே இலக்காகக் கொண்டும் நாம் செயற்பட்டு வருகின்றோம். பயிற்சியும், நிபுணத்துவமும் உள்ள பணியாளர்களே வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
வெளிநாடு செல்பவர்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் மொழி அறிவுகளை வழங்கியே கடந்த காலத்தில் பணிக்கு அனுப்பியுள்ளோம்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:
Post a Comment