மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்தியதன் காரணமாக எமது நாட்டு மக்களுக்கு ஒரு வருடத்திற்கு 4400 மில்லியன் ரூபா இலாபம் கிடைப்பதாக சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தேசிய மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் 16ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஹம்பாந்தோட்டை செங்கிரிலா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை (31) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதில் 300 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மருந்து விநியோகஸ்தர்கள் கலந்தகொண்டனர்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தேசிய மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் இலங்கையிலுள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் வைத்திய விநியோகஸ்தர் பிரிவினூடாக மருந்து வகைகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் என்பனவும் விநியோகித்து வருகின்றன. 2015ஆம் ஆண்டு 19000 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து வகைகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் என்பனவற்றை இறக்குமதி செய்தோம்.
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இத்தொகை 32000 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தோடு தேசிய மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஒசுசல கிளைகள் நாடுபூராவும் 28 இலிருந்து 44 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது தரமான மருந்துகளின் விற்பனை பல மடங்குகளினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனூடாக சகலரும் மருந்து வகைகளை ஒழுங்காகப் பாவிக்கிறார்கள். கடந்த காலங்களில் இந்த மருந்துகளின் விலைகள் சந்தையில் அதிகமானதாக காணப்பட்டதினால் மக்கள் இதனை பாவிக்க முன்வரவில்லை.
ஆனாலும் இன்று நிலைமை அவ்வாறல்ல. இதனால் தரமான மருந்துகளின் பயன்பாடும் விற்பனையும் ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து மில்லியன் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டிலுள்ள சாதாரண பிரஜைக்கும் தரமான மருந்து வகைகளை பாவிப்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
நாம் தற்பொழுது இங்கு நடாத்தும் இந்த மாநாட்டினூடாகவும் தரமான மருந்துகள் மற்றும் விலைகள் தொடர்பாகவே கலந்தரையாடினோம். இதனடிப்படையில் 27 மருந்துகளின் விலைகளை ஒழுங்கபடுத்தியுள்ளோம்.
இத்தோடு இதுவரை நாம் மருந்து விநியோகஸ்தர்களை பதிவு செய்வதினை மட்டுப்படுத்தியுள்ளோம். கூடுதலானவற்றை பதிவு செய்வதினை நிறுத்தியுள்ளோம். இவ்வாறான செயற்பாடுகளினூடாக எமது நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சாதாரண விலையில் தரமான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான சந்தர்பம் கிடைத்தள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை நிருபர்
No comments:
Post a Comment