சின்னப்பையன் நாமலுக்கு தமிழர் வரலாறு தெரியாது! - யாழில் மாவை பதிலடி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 1, 2019

சின்னப்பையன் நாமலுக்கு தமிழர் வரலாறு தெரியாது! - யாழில் மாவை பதிலடி

"நாட்டில் ஓர் தேர்தல் வரப்போகின்றது என்றவுடன் வடக்குக்கு வந்து மக்கள் மத்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி வருகின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச. அவருக்குத் தமிழர் வரலாறு தெரியாது."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா யாழில் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், "தமிழ் மக்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதுவும் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறுகின்றார். உண்மையில் அவருக்கு எமது வரலாறு தெரியவில்லைபோல் இருக்கின்றது. அவர் ஒரு சின்னப் பையன். 

புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது நாடு பிளவுபடப் போகின்றது என அவருடைய அப்பா நாடாளுமன்றத்தில் கொக்கரித்ததை எமது மக்கள் மறக்கமாட்டார்கள்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்ட நாம் தெரிவுசெய்யப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை மக்களுக்காகப் போராடி வருகின்றோம். நாம் எமது நலன் சார்ந்து செயற்படவில்லை. மக்களின் காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்றவற்றுக்காகப் போராடி வருகின்றோம்.

மிக முக்கியமாக தமிழ் மக்களின் மிக நீண்டகாலப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்குத் தீர்வாக புதிய அரசமைப்பு உருவாக்கம் நடைபெற்றது. ஆனால், இந்தச் சின்னப் பையனின் தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் நாடு பிளவுபடப் போகின்றது எனவும், இதனை சிங்கள மக்கள் எதிர்க்க வேண்டும் எனவும் கொக்கரித்தார். அதுமட்டுமல்லாது சிங்கள மக்கள் மத்தியில் பொய்யான பிரசாரமும் செய்தார்.

நாட்டில் ஓர் தேர்தல் வரப்போகின்றது என்றவுடன் வடக்குக்கு வந்து மக்கள் மத்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி வருகின்றார் மஹிந்தவின் மகன் நாமல். அவருக்குத் தமிழர் வரலாறு தெரியாது. இதை எமது மக்களும் நன்கு அறிவார்கள். எமது வரலாறு தெரியாத சின்னப்பையன் நாமலின் இவ்வாறான கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவிக்கின்றேன். 

நாமலும், அவரின் அப்பா மற்றும் சித்தப்பா ஆகியோரும் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான பதிலை வழங்கத் தயாரா? 

போரால் பாதிப்படைந்த வடக்கு, கிழக்கு மண் மீளக் கட்டியெழுப்பப்படவில்லை. மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இவற்றைச் செய்ய மறுத்த இவர்கள் இப்போது தேர்தல் நாடகம் ஆடுகின்றனர்" - என்றார்.

Charles Ariyakumar Jaseeharan

No comments:

Post a Comment