அதிகாரிகள் பொறுப்புடனும், பொதுநலத்துடனும் செயற்படவேண்டும் - சில அதிகாரிகள் இவ்வாறு செயற்படுகின்றனரா என சந்தேகம் எழுகின்றது - News View

About Us

About Us

Breaking

Friday, August 30, 2019

அதிகாரிகள் பொறுப்புடனும், பொதுநலத்துடனும் செயற்படவேண்டும் - சில அதிகாரிகள் இவ்வாறு செயற்படுகின்றனரா என சந்தேகம் எழுகின்றது

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவு அதிகாரிகள் பொறுப்புடனும், பொதுநலனுடனும் செயற்படவேண்டும் என்பதுடன் சொந்த விருப்பு, வெறுப்புகளை புறந்தள்ளிவைத்துவிட்டு நீதியான முறையில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். 

கண்டி மாவட்டத்திலுள்ள தமிழ் புத்திஜீவிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மத்திய மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதியாக கருதப்படும் ஆளுநரின் அதிகாரத்தின் கீழ்தான் ஆட்சி மற்றும் நிர்வாகப்பொறிமுறைகள் இருக்கின்றன. 

மாகாண அமைச்சரவையும் கலைந்துள்ளதால் அமைச்சுகளின் செயலாளர்களும், திணைக்களங்களின் பிரதானிகளுமே அதிகாரம் படைத்தவர்களாக இருக்கின்றனர். எனவே, தீர்மானங்களை எடுக்கும்போது அரசியலுக்கு அப்பால் சென்று சமூகத்தின் நலனையே முன்னிலைப்படுத்தி செயற்படவேண்டும். 

எனினும், மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ்ப் பிரிவுக்கு பொறுப்பாகவுள்ள சில அதிகாரிகள் இவ்வாறு செயற்படுகின்றனரா என சந்தேகம் எழுகின்றது. ஏனெனில் அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் குவிந்தவண்ணமுள்ளன. 

குறிப்பாக பழிதீர்க்கும் நோக்கிலும், சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காகவும் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாகவும், கண்டி மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களே இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

அண்மையில்கூட தனிப்பட்ட பிரச்சினை - பகைமை காரணமாக கண்டி மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

மலையகத்தில் சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கல்வியே எஞ்சியுள்ள பலம்பொருந்திய ஆயுதமாகும். அதனை சமூகப்பொறுப்புடன் அதிகாரிகள் கையாளவேண்டும். குறிப்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை ஆக்கத்துக்காக பயன்படுத்த வேண்டுமே தவிர ஒருபோதும் அழித்தலுக்காக பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். 

பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் திடீர் இடமாற்றங்களானவை மாணவர்களின் கல்வி நடவடிக்கையிலும் பெரும் தாக்கத்தை செலுத்தும் என்பது வேதனைக்குரிய விடயமாகும். 

அதேவேளை, அதிகாரிகளால் தன்னிச்சையான தீர்மானங்களால் பாதிக்கப்பட்டுள்ள கண்டி மாவட்ட ஆசிரியர்களுக்கு நீதி என்ற நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் இனியும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் நடந்துகொள்ளுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். 

இவ்விவகாரம் தொடர்பில் உரிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தயாராகி வருகின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment