உண்மையை மூடி மறைப்பதாக முபீனின் மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் குற்றச் சாட்டு - தலைவர் ரஊப் ஹக்கிமுக்கு கடிதமும் அனுப்பி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 2, 2019

உண்மையை மூடி மறைப்பதாக முபீனின் மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் குற்றச் சாட்டு - தலைவர் ரஊப் ஹக்கிமுக்கு கடிதமும் அனுப்பி வைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்
உண்மைக்குப் புறம்பாக ஊடக அறிக்கை வெளியிட்ட முபீனின் செயல்பாட்டினை வன்மையாக கண்டிப்பதோடு, இது சம்பந்தமாக கடிதம் ஒன்றிணையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பியுள்ளதாக முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு சார்பில் காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று (02.07.2019) ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டு இவர்களின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி நகரசபை (சுழற்சி முறையிலான) உறுப்பினர்கள் விடயத்தில் யு.எல்.எம்.என்.முபீன் இழுத்தடிப்புச் செய்வதாக பொறியியலாளர் சிப்லி பாறூக் அன்மையில் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுருந்தார் அதற்கு மறுப்பு என்ற பெயரில் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையினைப் பார்த்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) கட்சி சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் பட்டியல் வேட்பாளர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் மிகவும் கவலை அடைகின்றோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் காத்தான்குடி நகரசபைக்கான அதிகூடிய உறுப்பினர்களை இம்முறைதான் பெற்றுள்ளது இதற்கு பிரதானமான காரணம் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் வருகை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

அந்த வகையில் காத்தான்குடி நகரசபைக்கான உறுப்பினர்களை அனுப்புவது சம்பந்தமாக பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் இல்லத்தில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தின் போது முபீன் உட்பட நாங்கள் அனைவரும் சமுகமளித்திருந்தோம் அதில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன அவற்றில் பிரதானமாக காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களாக முதல் வருடம் சிப்லி பாறூக், முபீன் ஆகியோரை அனுப்புவது என்றும் அதன் பின்னர் ஏனையவர்களை சுழற்சி முறையில் அனுப்புவது என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு, அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு அதேநேரம் உடன்படிக்கை ஒன்றும் எழுதப்பட்டு அதில் முபீன் உட்பட அனைவரும் ஒப்பமிட்டோம் என்ற விடயம் இன்று பலருக்கு தெரியாது. முபீன் மறுத்தால் (தேவை ஏற்பட்டால்) ஒப்பந்தத்தினை ஊடகங்களில் வெளியிடுவோம்.

ஆனால் நடந்தது என்ன... நகரசபை உறுப்பினர் பதவிக்காலம் ஒரு வருடம் கழிந்த பின்னர் உடன்படிக்கையின் படி சிப்லி பாறூக் இராஜினாமா செய்வதற்கு தயாரான போதிலும் முபீன் பின்வாங்குபவராக உடன்படிக்கைக்கு மாறுசெய்பவராக, அது பற்றி யாருடனும் பேச தயாரில்லாதவராக காலத்தை. இழுத்தடிப்பு செய்து வந்தார்.

இது தொடர்பில் முபீனுடன் சிப்லி பாறூக் பேசுவதற்கு பலமுறை முயற்சி செய்தபோதிலும் முபீன் சிப்லியுடன் பேசாது காலத்தை இழுத்தடிப்புச் செய்து வந்தார். சிப்லி பாறூக் குறுந்தகவல் அனுப்பிய போதிலும் முபீன் அதனைக் கண்டு கொள்ளவில்லை அதன் பின்னர் மர்சூக் அஹமட்லெப்பை தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினை சிப்லி பாறூக் நியமித்து முபீனை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அந்தக் குழுவைக் கூட சந்திப்பதை முபீன் விரும்பவில்லை. 
இருந்த போதிலும் முபீன் நேரம் ஒதுக்காத நிலையிலும் ஓர் நாள் அதிகாலை நேரம் முபீன் வீட்டில் இருப்பார் என்ற எதிர்பார்ப்புடன் சென்று அவரை சந்தித்து நகரசபை உறுப்பினர்களின் சுழற்ச்சிமுறை சம்பந்தமாக பேசிய போது முபீனின் பேச்சு நயவஞ்சகத்தனமாக இருந்ததனைப் பார்த்து நாங்கள் ஆச்சரியமடைந்தோம். 

குறிப்பாக 'தான் நகரசபை பதவியினை ராஜினாமா செய்யமாட்டேன் என்றும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் வரும்வரை நான் உறுப்பினராகவே இருப்பேன்' என்று கூறியதனை அடுத்து அங்கு சென்ற குழுவினரில் சிலர் முபீனுடன் கடுமையாக பேசியுள்ளனர். குறிப்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்து விட்டு இப்போது ஏன் மறுக்கிறீர்கள் என்று ஒருவர் கேட்டதற்கு நான் அன்று ஒப்பந்தத்தில் விருப்பமில்லாமலே கைச்சாத்திட்டதாக நயவஞ்சகத்தனமாக முபீன் பேசியதனனை அடுத்து குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.

முபீனின் வீட்டில் என்ன நடந்தது....?
முபீன் என்னவெல்லாம் பேசினார்...?

போன்ற விடயங்களை இவ்விடத்தில் எழுதுவது, ஊடகங்களில் வெளியிடுவது சாத்தியமாகாது என்பதனால் தவிர்க்கின்றோம். எனவேதான் முபீன் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உண்மையை மறைத்து மற்றவர்களுக்கு தான் உத்தமன் என காட்ட வேண்டும் என்பதற்காக ஊடக அறிக்கை விடுவதென்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றதாகும்.

உண்மையை மறைப்பதும், சிப்லி பாறூக் போன்றவர்களின் நேர்மையான செயல்பாட்டினை அற்ப அரசியலுக்காக கொச்சைப்படுத்துவதும், அறிக்கை விடுவதனையும் இன்றுடன் அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவரைப்போன்ற கட்சியின் மூத்த போராளியின் செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் எம்மைப் போன்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதற்கு பதிலாக வாக்குமாறுகின்ற நம்பிக்கைத்துரோகம் செய்கின்றவராக இருக்கக்கூடாது என்பதே எங்களது எதிர்பார்ப்பாகும்.

இது தொடர்பாக விரிவான கடிதம் ஒன்றினை எழுதி அதிலும் குறிப்பாக கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட 19 உறுப்பினர்களின் 17 பேர் ஒப்பமிட்டு கட்சியின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களுக்கு அனுப்பிருக்கின்றோம். அதற்கு மிக விரைவில் பதில் கிடைப்பதோடு புதிய உறுப்பினர் இருவரை இன்ஷாஅல்லாஹ் வெகுவிரைவில் காத்தான்குடி நகரசபைக்கு அனுப்புவோம் என்ற செய்தியை சொல்வதோடு பல்வேறு விடயங்கள் பற்றி எதிர்காலங்களில் நாம் ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தி தெளிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என்ற செய்தியையும் தெரிவித்து 'சத்தியம் வந்தால் அசத்தியம் அழியும்' என்ற அஹீதாவோடு விடை பெறுகின்றோம்.

இப்படிக்கு
கடந்த நகரசபைத் தேர்தலில் MNA இல் போட்டியிட்ட SLMC ஒன்பது வேட்பாளர்களும் ஏழு பட்டியல் வேட்பாளர்களும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களுக்கு வேட்பாளர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.

No comments:

Post a Comment