கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் மாணவிகளை பரீட்சை எழுத அனுமதி வழங்காமல் இடையூறு செய்யப்பட்டமை தொடர்பில், பரீட்சை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்களை பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வழங்குவதாக ஆணையாளர் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை நேற்று நாடுபூராகவும் ஆரம்பமானது. இந்த நிலையில் பாடசாலை சீருடையில் (வெள்ளை நிற பர்தா) பரீட்சை எழுதச் சென்ற சில மாணவிகளுக்கு பர்தாவை அகற்றிவிட்டு பரீட்சை எழுதுமாறு பணிக்கப்பட்டதாக சில பகுதிகளில் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பூகொடை குமாரிமுல்ல மாணவிகள் சிலர் பரீட்சை எழுத தயாரான நிலையில், பர்தாக்களை அகற்றுமாறு பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி கடுமையாக உத்தரவிட்டதால் அந்த மாணவிகள் பர்தா இன்றி பரீட்சைக்கு தோற்றினர். பின்னர் பெற்றோரினால் அவர்களுக்கு முக்காடுகள் வழங்கப்பட்டதாகவும் அறிய வருகிறது.
கிரிந்திவெல மத்திய கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளுக்கே, இந்நிலை ஏற்பட்டது. மேலும் இம் மாணவிகளை பாடசாலை நுழைவாயிலில் பரிசோதனைக்கு உட்படுத்தியே பரீட்சை நிலையத்திற்குள் அனுமதித்திருந்தனர்.
வினாத்தாள்கள் வழங்கப்பட இருந்த நிலையிலே பர்தாக்களை அகற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாடசாலை அதிபர் எம்.கே.ஆர்.மொஹமட் வலயக் கல்விப் பணிமனையிலும் கம்பஹா கல்விப் பணிப்பாளரிடமும் முறையிட்டுள்ளார்.
இதே போன்று வெலிமடையில் பரீட்சை எழுதிய மாணவிகளும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக அறிவிக்கப்படுகிறது. வெலிமடை தமிழ் வித்தியாயத்தில் பரீட்சைக்கு தோற்றச் சென்ற மாணவிகளே இவ்வாறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக பெற்றோர் கூறியுள்ளனர்.
வெலிகமை அறபா தேசிய பாடசாலை மாணவிகள், சுமங்கல கல்லூரியில் பரீட்சை எழுதியபோது, பர்தாவை அகற்றி முக்காடு அணிந்து பரீட்சை எழுதுமாறு பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள் பணித்ததாக மாணவிகளின் பொற்றோர் தெரிவித்தனர். கடந்த வருடமும் இதே நிலையத்தில் மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக அறியவருகிறது.
இது போன்று வேறு சில பிரதேசங்களிலும் பர்தா அணிந்து பரீட்சை எழுத இடையூறு செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
பர்தா அணிந்து பரீட்சை எழுத எந்தத் தடையும் கிடையாது என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், காது தெரியும் வகையில் பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியும் என பரீட்சை ஆணையாளர் தன்னிடம் கூறியதாகவும் அவர் கூறினார்.
சில இனவாத போக்குள்ளவர்கள் வேண்டுமென்றே ஒவ்வொரு வருடமும் பரீட்சைகளின் போது குழப்பம் ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இதேவேளை புலமைப் பரிசில் பரீட்சைக்கு பர்தா அணிந்து சென்ற மாணவிகளுக்கும் சில இடங்களில் அவற்றை அகற்றி பரீட்சைக்கு தோற்றுமாறு பணிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
ஷம்ஸ் பாஹிம், பூகொட நிருபர்
No comments:
Post a Comment