வாழைச்சேனை கடதாசி ஆலையினால் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஆதனவரி நிலுவை, அதற்கு பதிலீடாக நாம் ஏதாவது ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் - தவிசாளர் ஐ.ரி.அஸ்மி - News View

About Us

About Us

Breaking

Friday, August 30, 2019

வாழைச்சேனை கடதாசி ஆலையினால் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஆதனவரி நிலுவை, அதற்கு பதிலீடாக நாம் ஏதாவது ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் - தவிசாளர் ஐ.ரி.அஸ்மி

எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை கடதாசி ஆலையினால் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஆதனவரியாக ஒரு கோடியே முப்பத்தி ஏழு இலட்சத்து இருபத்தாராயிரத்து நானூற்றி ஒன்னூற்றி ஐந்து ரூபாய் பதினாறு சதம் (13726495.16) செலுத்த வேண்டிய நிலுவை தொகையாக உள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை கேட்போர் கூடத்தில் பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நடைபெற்ற போது தலைமை உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

பிரதேச சபை தவிசாளர் மேலும் தெரிவிக்கையில் வாழைச்சேனை கடதாசி ஆலையினால் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஆதனவரி மற்றும் அனுமதி வரி பணமாக வருடாந்தம் 67363.60 ரூபாய் செலுத்த வேண்டிய தொகையாக நிர்ணயிக்கப்பட்டு பிரதேச சபைக்கு செலுத்தப்பட வேண்டும். அந்த வகையில் 1996ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டு வரை சுமார் ஏழு வருடங்களுக்கு 35652 ரூபாய் வீதம் 248867.64 ரூபாய் மாத்திரம் சபைக்கு செலுத்தி உள்ளனர்.

2002அம் ஆண்டு வரை பணம் செலுத்தி விட்டு 2003ஆம் ஆண்டில் இருந்து பழைய மீதி தொகையை செலுத்தவில்லை. அந்த வகையில் 1996ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை 67363.60 ரூபாய் வீதப்படி சபைக்கு செலுத்த வேண்டுமாக இருந்தால் ஒரு கோடியே முப்பத்தி ஒன்பது இலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து முன்னூற்றி அறுபத்தி இரண்டு ரூபாய் எண்பது சதம் (13969362.80) செலுத்த வேண்டிய தொகையாக உள்ளது.
ஆனால் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு வாழைச்சேனை கடதாசி ஆலையினால் செலுத்திய 248867.64 ரூபாவினை கழித்தால் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு வாழைச்சேனை கடதாசி ஆலையினால் ஒரு கோடியே முப்பத்தி ஏழு இலட்சத்து இருபத்தாராயிரத்து நானூற்றி தொன்னூற்றி ஐந்து ரூபாய் பதினாறு சதம் (13726495.16) செலுத்த வேண்டிய நிலுவை தொகையாக உள்ளது.

குறித்த நிதியினை ஓட்டமாவடி பிரதேச சபைக்கு வழங்குமாறு கோரி கடந்த காலத்தில் நீதிமன்ற வழக்கும் தொடரப்பட்டு இடைநடுவில் குறித்த வழக்கு இடை நிறுத்தப்பட்டு காணப்பட்டது. குறித்த நிலுவை தொடர்பான ஆவணங்களும் கடந்த காலத்தில் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே வாழைச்சேனை கடதாசி ஆலையின் குறித்த நிலுவை செலுத்த வேண்டும் அல்லது அதற்கு பதிலாக ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஏதாவது ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டும். எமக்கு செலுத்த வேண்டிய பணத்தினை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பதை பற்றியும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றார்.

குறித்த சபை அமர்வில் பிரதி தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, சபை உறுப்பினர்கள், சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment