எம்.எஸ்.எம்.நூர்தீன்
தற்கொலை குண்டுதாரியின் உடல் பாகங்களை இந்து மக்கள் தங்களுடைய மயானத்தில் அடக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமாக இருந்தாலும் அதனை சட்ட ரீதியாக அணுகுவதை விட்டு விட்டு ஒரு சமூகத்தின் மீது இன ரீதியாக காய்நகர்த்தப்படுவது மிகவும் கவலையான விடயமாகும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
29.08.2019 வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பு கல்லடி பாலத்தை மறித்து அப்ப்பாலத்தினூடாக சென்று கொண்டிருந்த முஸ்லிம் பிரயாணிகளுக்கு அங்கு குழுமியிருந்த ஓர் இனவாதக்கும்பல் பிரயாணத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் பலருடைய வாகனங்களுக்கு அடித்தும் தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்ப்பதாகவும் பல முஸ்லிம் பிரயாணிகள் எனக்கு தொலைபேசியினூடாக தெரிவித்ததுடன் பெண்கள் உட்பட பலர் மட்டக்களப்பிற்கு வெளியில் இருந்து காத்தான்குடிக்கு வருவதற்கு அச்சத்துடன் ஏறாவூரிலும் வீதி ஓரங்களிலும் ஒதிங்கி நிற்பதாக என்னிடம் முறையிட்டார்கள்.
முற்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவரின் பர்தாவினை இழுத்து துன்புறுத்தப்படுவதாகவும் ஒரு பெண் என்னுடன் தொலைபேசியில் கூறினார் மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த காத்தான்குடியைச் சேர்ந்தவர்களுக்கு கல்வீச்சு நடத்தியதுடன் ஒட்டுமொத்த காத்தான்குடி மக்களின் உணர்வை தூண்டும் வகையிலான மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து ஏசிக் கொண்டிருப்பதாக அறியக்கிடைத்தது.
இதற்கு அடிப்படை காரணமாக அமைந்தவிடயம் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைக்குண்டு தாக்குதல் நடாத்திய பயங்கரவாதியின் உடற்பாகங்களை புதைத்தமையாகும். இதனை எதிர்த்து அவ் உடற்பாகங்களை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்ற ரீதியில் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இவ் ஆர்ப்பாட்டமானது ஒட்டு மொத்தமாக காத்தான்குடி மக்களை நோக்கியதாக அரசியல்வாதிகளால் திசை திருப்பப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்ட அரசியல் பிரமுகர் ஒருவர் இன ரீதியான கருத்துக்களை வெளியிட்டதுடன் இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான முறுகல் நிலையை தோற்றுவிக்கும் விதமாக அமைந்திருந்தது.
இப்படிப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை முஸ்லிம்களின் பொது மயானங்களில் புதைக்கப்படுவதை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மறுத்திருந்தது. இவ்வாறான நிலையில் இந்து மக்கள் தங்களுடைய மயானத்தில் இவ்வுடல்பாகங்களை அடக்குவதில் எதிர்ப்புக்காட்டுவது நியாயமாக இருந்தாலும் அதனை சட்ட ரீதியாக அணுகுவதை விட்டு விட்டு ஒரு சமூகத்தின் மீது இன ரீதியாக காய்நகர்த்தப்படுவது மிகவும் கவலையான விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment