பயங்கரவாதியின் உடல் புதைக்கப்பட்ட விவகாரத்தில் உண்மைத் தன்மை வெளிவர வேண்டும் - யோகேஷ்வரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 29, 2019

பயங்கரவாதியின் உடல் புதைக்கப்பட்ட விவகாரத்தில் உண்மைத் தன்மை வெளிவர வேண்டும் - யோகேஷ்வரன் எம்.பி

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மயானத்தில் பயங்கரவாதியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைத்தன்மை வெளிக்கொணரப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இந்தியாவிலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. “மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மயானத்தில் முஸ்லிம் பயங்கரவாதியின் உடற்பாகங்கள் மாநகர சபையின் அனுமதியில்லாமல் புதைக்கப்பட்டுள்ளது. அவ்வாறானால் அதனை புதைப்பதற்கு நடவடிக்கையெடுத்தவர்கள் யார் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட ஒரு இடத்தில் அவர்களின் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் குறித்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டுள்ளது.

அந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டபோது கிராம சேவையாளரும் அங்கு பிரசன்னமாகியிருக்கின்றார். அவ்வாறானால் அந்த கிராம சேவையாளருக்கு அந்த கட்டளையினை பிறப்பித்தவர் யார் என்ற விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும்.

குறித்த தற்கொலைதாரியின் உடற்பாகத்தினை அங்கிருந்து அகற்ற வேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பு மாநகர முதல்வர் எடுத்து வருகின்றார்.

அவருக்கு நாங்கள் பக்கபலமாக நிற்போம். எக்காரணம் கொண்டும் அந்த உடல் எச்சங்கள் கள்ளியங்காடு இந்து மயானத்தில் இருக்ககூடாது. இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களையும் இந்துக்களையும் புண்படுத்தும் செயற்பாடாகும்.

இந்த உடற்பாகங்களை புதைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கையெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறானால் எந்தவித சட்ட நடைமுறையினையும் பின்பற்றாது இவ்வாறான செயற்பாடுகளை பொலிஸார் மேற்கொள்வது கவலைக்குரியதாகும்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment