போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிராக வீதியில் இறங்கியிருக்கும் அனைவரும் சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிரானவர்கள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்கள் போன்ற பாரிய குற்றங்களுக்கு பின்னால் போதைப்பொருளே இருப்பதாகவும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தீர்மானித்தது எதிர்கால தலைமுறைக்காக சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (01) முற்பகல் பண்டாரவளை நகர மண்டப கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற அமரபுர சிறி சத்தம்மவங்ச மகாநிக்காயவின் ஊவா மாகாண தலைமை சங்க நாயக்கர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சங்கைக்குரிய கல்கொடகம சோபித்த நாயக்க தேரருக்கு உறுதிப்பத்திரத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
முன்னேற்றமடைந்த நாடு என்பது பௌதீக வளங்கள் மட்டும் அபிவிருத்தியடைந்த ஒரு நாடாக மட்டுமன்றி ஒழுக்கப் பண்பாடுகளைக்கொண்ட சிறந்த மனிதர்கள் வாழும் சிறந்ததோர் நாடாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆன்மீக பலம்கொண்ட சிறந்த மனிதர்கள் வாழும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு மகாசங்கத்தினர் மேற்கொண்ட பணிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றி வருவதைப்போன்று மகாசங்கத்தினரையும் போஷித்து பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அரச கொள்கைக்கேற்ப அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சங்கைக்குரிய கல்கொடகம சோபித்த நாயக்க தேரர் சிறந்ததோர் எழுத்தாளர் என்பதுடன், பௌத்த தத்துவம் தொடர்பான நூலொன்றையும் வெளியிட்டுள்ளார்.
நான்கு விகாரைகளின் விகாராதிபதியாக பதவி வகித்து சமய, சமூக பணிகளை மேற்கொண்டுவரும் அவரது பணிகளைப் பாராட்டி இந்த தலைமை சங்கநாயக்கர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன், அவருக்கான உறுதிப்பத்திரத்தை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
சங்கைக்குரிய பல்லேகந்த ரத்தனசார அநுநாயக்க தேரர், சங்கைக்குரிய கஹத்தேவெல சிறி நிவாசாபிதான நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத்த தசநாயக்க உள்ளிட்ட அரசியல் பிரிதிநிதிகள் பலரும் இநிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment