ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை நடத்திச் செல்ல இடமளிப்பதற்காக அவன்ற் கார்ட் மெரிடைம் சர்விசஸ் நிறுவனத்திடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணையில் பிரதிவாதிகள் இன்று மன்றில் ஆஜராகத் தவறியதை தொடர்ந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான நிஸங்க சேனாதிபதி சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதாகவும் முதலாவது பிரதிவாதியான பாலித்த பெர்னாண்டோ வேறு வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன தெரிவித்தார்.
இதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை மன்றில் சமர்ப்பிக்க தவறியதையடுத்து, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பிரதிவாதிகள் இருவரின் பிணையாளர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment